» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நீக்கம்!

திங்கள் 23, மார்ச் 2020 10:22:57 AM (IST)

விருதுநகர், அதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

தமிழக பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் கே.டி.ராஜேந்திரபாஜி. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். திருத்தங்கல் அதிமுக நகரச் செயலராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலராகவும் பொறுப்பு வகித்து வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் மாவட்டச் செயலராக பொறுப்பேற்றார்.

கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சராகவும், தற்போது பால்வளத்துறை அமைச்சராகவும் கே.டி.ராஜேந்திரபாலஜி பொறுப்பு வகித்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை ஓரம்கட்டி தனது செல்பாட்டால் தொடர்ந்து மாவட்ட அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, டி.டி.வி. தினகரன் அணி என பிரிவு ஏற்பட்டபோது கட்சியில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து இபிஎஸ் அணியில் தொடர்ந்து மாவட்டச் செயலராகவும் அமைச்சராகவும் வலம் வந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அண்மையில் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கட்சியில் சலசலப்புகள் ஏற்பட்டன. மேலும், கட்சி பொறுப்பில் மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியாகும் என்ற பேச்சும் கட்சியினரிடையே அடிபட்டது.

இதற்கிடையே விருதுநகரில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் அமைச்சரும் மாவட்டச் செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து கே.டி.ராஜேந்திரபாலாஜியை நீக்கம் செய்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடியாக மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory