» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக ஆய்வுகளை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வ‌ர் கடிதம்

சனி 15, பிப்ரவரி 2020 4:56:06 PM (IST)

மத்திய அரசு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மேலும் நடத்த இருக்கும் ஆய்வுகளை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், என்னுடைய தலைமையில் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துகருப்பன், விஜயகுமார், சந்திரசேகரன், முகமது ஜான் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் துறை முதன்மை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு, 10.2.2020 அன்று டெல்லியில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து, முதல்- அமைச்சரின் கடிதத்தைக் கொடுத்தது.

அந்த கடிதத்தில் உள்ள விவரங்கள் என்ன என்பது பற்றி சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்த கடிதத்தின் விவரத்தை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது எனக்கருதி அக்கடிதத்தை வெளியிடுகிறேன். அந்த கடிதத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது: நான் பிரதமர் மோடிக்கு 21.1.2020 அன்று எழுதிய கடிதத்தில், மத்திய அரசு கடந்த 16.1.2020 அன்று திருத்தப்பட்ட முந்தைய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிப்பாணையில், கடற்கரையோரம் அல்லது கடலில், எண்ணை மற்றும் எரிவாயு ஆகியவற்றை பூமிக்கடியில் இருந்து எடுப்பதற்கான ஆய்வுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்று அறிவித்ததை பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.

இந்த அறிவிப்பு தொடர்பாக, பாதுகாக்கப்படும் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்று நான் தெரிவித்து இருந்தேன். அம்மாவின் தலைமையிலான தமிழக அரசு 2014-ம் ஆண்டு டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டம் தொடர்பாக ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையில், மீத்தேன் திட்டத்தால் 4266 ஏக்கர் சாகுபடி நிலங்கள் எடுக்கப்படும். தினமும் 1 லட்சம் கிலோ லிட்டர் நிலத்தடி நீர் 25 ஆண்டுகளுக்கு வெளியே எடுக்கப்படும். இதனால் நிலத்தடி நீர் குறைந்து பாதிக்கப்படும் என்றும், நிலத்தடியில் கடல்நீர் புகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும் மாசுப்படும் தண்ணீரால் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் உள்ளது. 667 சதுர கிலோ மீட்டருக்கு அமைக்கப்படும் பைப்- லைன்கள் மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படும் என்றும் தெரிவித்து இருந்தது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளின்படி அம்மாவின் அரசு 8.10.2015-ம் ஆண்டு மீத்தேன் திட்ட ஆய்வு தொடர்பான பணிகளை டெல்டா பகுதியில் மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும், மீத்தேன் திட்டம் தொடர்பாக தொடக்க நிலைக்கு முன்பாக மாநில அரசுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும் அம்மா வலியுறுத்தி இருந்தார்.

தற்போது கூடுதலாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதியை பாதுகாக்க மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை இருப்பது தெளிவாக அறியப்பட்டுள்ளது. ஏற்கனவே நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில், மீத்தேன் திட்டத்தால் நிலத்தடி நீரில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே டெல்டா பகுதிகள் அடிக்கடி ஏற்படும் புயல், வெள்ளம் மற்றும் வறட்சிகள் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மாநிலத்தின் உணவு உற்பத்திக்கும் கேடு விளைவிக்கும், பாதிப்பை ஏற்படுத்தும்.

டெல்டாவில் பெரும்பாலான விவசாய பணிகள் ஆழ்துளை கிணறு மூலம் நடக்கிறது. ஏற்கனவே 8.10.2015-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஆழ்துளை கிணறுகள் பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பைப்-லைனில் செல்லும் எரிவாயு மற்றும் மாசு தண்ணீர் இயற்கை மேற்பரப்புகளை பாதிக்கும். புதிய மற்றும் மேலும் நடத்தும் ஆய்வுகள், சுரண்டல்கள் மூலம் டெல்டா பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலைக்கு கேடு ஏற்படும். இதன் முலம் விவசாய நிலங்கள், கடல்நீர் புகும் காரணமாகவும், பருவநிலை மாற்றத்தாலும் ஆபத்தை சந்திக்கும்.

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து ஆதரவாளர்கள் கூறும் நன்மைகளை விட அந்த திட்டத்தின் பாதகங்கள் அதிகமாக இருக்கிறது. பைப்-லைன் செயலழிப்பு, விபத்து, கசிவுகள், வெடிப்புகள் ஆகியவை சொத்துக்கும், விவசாய நிலங்களுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும், உடல்நலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும். டெல்டா பகுதியில் புகழ்பெற்ற தஞ்சாவூர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில், நவக்கிரக கோவில்கள், வேளாங்கண்ணி தேவாலயம், நாகூர் தர்கா போன்ற வரலாற்று சிறப்பு மிக்க, கலாச்சார பாரம்பரிய இடங்கள் உள்ளன. நமது நாட்டின் இந்த கலாச்சார பாரம்பரியமிக்க இடங்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அழிக்கப்படும். 

எனவே மத்திய அரசு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மேலும் நடத்த இருக்கும் ஆய்வுகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எனவே டெல்டா பகுதியில் வருங்காலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக ஆய்வு உள்பட எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு 16.1.2020 அன்று திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் அறிவிப்பு ஆணையில் தமிழகத்தின் டெல்டா பகுதிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக நான் ஏற்கனவே அறிவித்துள்ளேன். தமிழக அரசின் இந்த பெருமுயற்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்-அமைச்சர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory