» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் புதிய இருவழிபாதை திட்டங்களுக்கு அனுமதி: பழைய திட்ட பணிகளுக்கு நிதி ஓதுக்கீடு

வியாழன் 6, பிப்ரவரி 2020 4:20:15 PM (IST)

தமிழகத்தில் புதிய இருவழிபாதை திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், பழைய திட்ட பணிகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்துள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரயில்வே இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளது.  இந்த பாதைகளில் சென்னை சென்ட்ரலில் துவங்கி காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரளா செல்லும் சுமார் 500 கி.மீ ரயில்பாதை இருவழிபாதையாக பலவருடங்களுக்கு 2000 முன்பே மாற்றம் செய்யப்பட்டது. 

இந்தியாவின் கடைசி பகுதியான கன்னியாகுமரியிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை செல்லும் வழிதடம் மிக முக்கியமான ரயில் வழி தடம் ஆகும். இந்த ரயில் தடம் தமிழகத்தின் ரயில் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக உள்ளது. இந்த வழி தடம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இந்த வழி தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் இயங்குகின்றன. இந்த வழி தடத்திலிருந்து தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கு ரயில் வழி தடங்கள் பிரிந்து செல்கிறது. 

தென்மாவட்ட பயணிகள் சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேவி கன்னியாகுமரி பாதையை இருவழிபாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையின் அடிப்படையில் படிபடியாக பணிகள் நடைபெற்று தற்போது சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ பாதை இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை 50கி.மீ பாதை இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் சுமார் 4027 கி.மீ பாதை உள்ள தமிழகத்தில் சுமார் 1027 கி.மீ பாதை மட்டுமே இருவழிபாதையாக உள்ளன. மீதமுள்ள சுமார் 3000 கி.மீ பாதை இன்னமும் ஒருவழிபாதையாகவே உள்ளது. இதில் சுமார் 350 கி.மீ தூரத்துக்கு இருவழிபாதை பணி திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையை இருவழிபாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் மத்திய  இணைஅமைச்சர் பொன்னாரின் தீவிர முயற்சியால் இந்த திட்டம் 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் நடைபெறும் இருவழிபாதை பணிகள் விபரம்

ரயில்கள் இயங்கும் இருவழிபாதைகள்

1. சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் - 500கி.மீ

2. சென்னை எழும்பூர் - மதுரை – 490 கி.மீ

3. திருச்சி – தஞ்சாவூர் - 50 கி.மீ

நடைபெறும் இருவழிபாதை பணிகள்

1. கன்னியாகுமரி – திருவனந்தபுரம்

2. மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி

3. மணியாச்சி – நாகர்கோவில்

இந்த பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட புதிய இருவழிபாதை திட்டங்கள்

1. ஓமலூர் - ஓசூர் 147 கி.மீ

2. காட்பாடி – திருவண்ணாமலை – விழுப்புரம் - 160.10 கி.மீ

3. சேலம் - கரூர் - திண்டுக்கல்  - 160 கி.மீ

4. ஈரோடு – கரூர் - 65 கி.மீ

5. சென்னை பீச் - சென்னை எழும்பூர்  - 4.3 கி.மீ


சர்வே முடிக்கப்பட்டு அனுமதி கிடைக்காத திட்டம்

தஞ்சாவூர் - விழுப்புரம்  - 193 கி.மீ

கன்னியாகுமரி -திருவனந்தபுரம் இருவழிபாதை
     
கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85கி.மீ பாதையை இருவழிபாதையாக மாற்ற 900 கோடிகள் கொண்ட திட்டத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு; இந்த ஆண்டு பட்ஜெட்டில் 132 கோடியே 50 லட்;சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது முதல் முன்னுரிமையான கன்னியாகுமரி – நாகர்கோவில் - இரணியல் பகுதி பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.  நிதிபற்றாக்குறை காரணமாக கடந்த நான்கு மாதங்கள் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது  இந்த பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி – நாகர்கோவில் பிரிவு இந்த வருட இறுதிக்குள் இருவழிபாதை ரயில் பயணிகள்  நிறைவுபெற்று பயணிகள் போக்குவரத்துக்கு திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

திட்ட விபரம்

1. திருவனந்தபுரம் - கன்னியாகுமரி - 87 கி.மீ
2. முதல் சர்வே – 2005-06
3. முதல் சர்வே ரேட் ஆப் ரிட்டன் -0.77 சதமானம்
4. முதல் சர்வே மதிப்பீடு - 526 கோடிகள்
5. இரண்டாம் சர்வே - 2013-14
6. இரண்டாம் சர்வே ரேட் ஆப் ரிட்டன் 7.03 சதமானம்
7. இரண்டாம் சர்வே மதிப்பீடு - 617 கோடிகள்
8. திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்ட ஆண்டு- 2015-16
9. நிதிஆயோக்கின் ஒப்புதல்  - 26-04-2017
10. மந்திரிசபை ஒப்புதல் - 2-8-2017
11. திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது – 23-01-2018
12. மொத்த திட்ட மதிப்பீடு - 1,431.90 கோடிகள்
13. 2017-18 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 92 லட்சங்கள்
14. 2018-19 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 100 கோடியே பத்து லட்சங்கள்
15. 2019-20 ஆண்டு நிதி ஒதுக்கீடு – 138 கோடிகள்
16. 2020-21 ஆண்டு நிதி ஒதுக்கீடு – 132 கோடியே 50 லட்சங்கள்
 
நாகர்கோவில் - மதுரை இருவழிபாதை
       
நாகர்கோவிலிருந்து மதுரை வரை உள்ள பாதையை இருவழிபாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாக என இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு 1,182.31 கோடிகள் எனவும், நாகர்கோவில் - மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு 1,003.94 கோடிகள் ஆகும். இந்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நாகர்கோவில் - மணியாச்சி இருவழிபாதை பணிகளுக்காக 345 கோடியும், மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி திட்டத்துக்கு 367 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரயில்வேதுறையின் கீழ் உள்ள பொதுதுறை நிறுவனமான ஆர்விஎன்எல் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த இரண்டு திட்டத்துக்கு சேர்த்து இந்த ஆண்டு மொத்த ஒதுக்கீடு 712 கோடிகள் ஆகும். இது மொத்த திட்டமதிப்பீடில் இதுவரை சுமார் 65 சதமானம் நிதி முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டும் இவ்வாறு நிதி ஓதுக்கீடு செய்து வந்தால் இன்னமும் 2022-ம் ஆண்டிற்குள் கன்னியாகுமரி – மதுரை இருவழிபாதை பணிகள் முழுவதும் நிறைவுபெற்றுவிடும். தற்போது இந்த பணிகள் விரைவாகவும் எந்த ஒரு நிதிபற்றாகுறையுமின்றி நடைபெற்று வருகிறது. 

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது இந்த திட்டம் தென்மாவட்ட மக்களின் நீண்டகால கனவு திட்டமாகும். இந்ததிட்டம் 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ரயில்வேத்துறை இவ்வளவு நிதி ஒதுக்கீடு பணிகள் வேகமாக நடைபெறுவதற்கு முழுக்க முழுக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடுமையாக முயற்சியே ஆகும். அவர் இல்லை என்றால் இந்த திட்டம் இந்த அளவுக்கு செயல்வடிவத்துக்கு வர வாய்ப்பே இல்லை. இதற்கு காரணமான முன்னாள் மத்திய அமைச்சரை பாராட்டுகின்றோம்.

திட்ட விபரம்

1. சர்வே அறிவிக்கப்பட்ட ஆண்டு – 2012-13

2. சர்வேயின் படி திட்ட மதிப்பீடு - 1926 கோடிகள்

3. திட்ட தூரம் - 159  + 102 -  261 கி.மீ

4. ரேட் ஆப் ரிட்டன் வருவாய்- 8.095 சதமானம்

5. திட்டம் செயல்படுத்த அறிவிக்கப்பட்ட ஆண்டு- 2015-16

6. நிதிஆயோக்கின் ஒப்புதல்  - 26-04-2017

7. மந்திரிசபை ஒப்புதல் - 2-8-2017

8. திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது – 23-01-2018

9. 2017-18 ஆண்டு நிதி ஒதுக்கீடு – 39.5 கோடிகள்

10. 2018-19 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 75 + 75 = 150 கோடிகள்

11. 2019-20 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 169+183 = 352 கோடியே 50 லட்சங்கள்

12. 2020-21 ஆண்டு நிதி ஓதுக்கீடு – 364 + 367 = 712 கோடிகள்

இருவழிபாதையால் தென்மாவட்ட வளர்ச்சி:-
          
கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு இருவழிபாதை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டால் தற்போது இந்த தடம் வழியாக இயக்கப்பட்டுவரும் அனைத்து ரயில்களுக்கும் பயணநேரம் கணிசமான அளவு குறையும். கன்னியாகுமரியிலிருந்து சென்னை வழியாக வடஇந்திய நகரங்களுக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும். இதுமட்டுமில்லாமல் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, விழுப்புரம் போன்ற இடங்களிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து ரயில்களும் குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க முடியும். தற்போது கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணாகுளம் மார்க்கம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் வீதம் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுவது போல் தமிழகத்திலும் இயக்க பிரகாசமான வாய்புகள் உருவாகும். தென்மாவட்டங்களிலும் ராஜதானி, சதாப்தி, ஜனசதாப்தி, டபுள்டக்கர், கரீப்ரதம் போன்ற ரயில்கள் அறிவிக்கப்படலாம். தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு கூடுதல் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும்.

சேலம் - பெங்களுர் இருவழிபாதை 

சேலத்திலிருந்து ஓசூர் வழியாக பெங்களுர் வரை உள்ள 218 கி.மீ பாதையை இருவழிபாதையாக மாற்ற மூன்ற திட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சேலம் முதர் ஓமலூர் வரை உள்ள தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 11 கி.மீ தூரம் உள்ள பாதை இருவழிபாதையாக மாற்ற வேண்டி இந்த பட்ஜெட்டில் 22 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு மண்டலம் சார்பாக பெங்களுர் பையப்பகள்ளி முதல் ஓசூர் வரை உள்ள இருப்புபாதை இருவழிபாதையாக மாற்றம் செய்ய ஐந்து கோடிகள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இது மட்டுமில்லாமல் சேலம் - பெங்களுர் பாதையில் மீதமுள்ள ஓமலூர் - ஓசூர் 147 கி.மீ பாதை இருவழிபாதையாக மாற்றம் செய்ய இந்த பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 147 கி.மீ தூரம் திட்டத்தின் மதிப்பீடு 1470 கோடிகள் ஆகும். இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ள காரணத்தால் 1000 ரூபாய் மட்டுமே ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக புதிய திட்டங்கள் அனுமதிக்கப்படும் போது இவ்வாறு குறைந்த அளவு நிதிதான் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இந்த மூன்று திட்டங்களும் நிறைவேறினால் தமிழகத்திலிருந்து பெங்களுர் செல்லும் ரயில்கள் சிக்னல்காக ரயில் நிலையங்களில் காத்து கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது. இது மட்டுமில்லாமல் பயணநேரமும் கணிசமான அளவில் குறையும்.

ஈரோடு – கரூர்

ஈரோடிலிருந்து கரூர்க்கு செல்லும் 65 கி.மீ தூரம் உள்ள ஒரு வழி இருப்புபாதையை இருவழிபாதையாக மாற்றம் செய்ய இந்த ஆண்டு புதிய திட்டமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒரு கி.மீ தூரத்துக்கு பத்து கோடிகள் வீதம் 650 கோடிகள் திட்ட மதிப்பீடாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் அனுமதி மதிப்பீடாக 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வருகின்ற இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

சேலம் - கரூர் - திண்டுக்கல்

 சேலத்திலிருந்து நாமக்கல், கரூர் வழியாக திண்டுக்கல் செல்லும் 160 கி.மீ பாதையை இருவழிபாதையாக மாற்றம் செய்ய இந்த ஆண்டு புதிய திட்டமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் திட்ட மதிப்பீடு 1600 கோடிகள் ஆகும். இந்த பட்ஜெட்டில் அனுமதி மதிப்பீடாக 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வருகின்ற இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

காட்பாடி – விழுப்புரம்

காட்பாடியிலிருந்து திருவண்ணாமலை வழியாக விழுப்பும் செல்லும் 160.10 கி.மீ தூரம் உள்ள  ரயில்பாதையை இருவழிபாதையாக மாற்றம் செய்ய இந்த பட்ஜெட்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் திட்ட மதிப்பீடு 1601 கோடிகள் ஆகும். இந்த பட்ஜெட்டில் அனுமதி மதிப்பீடாக 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வருகின்ற இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தமிழக பயணிகளால் மீண்ட ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட வேண்டிய திட்டமாக தஞ்சாவூர் - விழுப்புரம் பாதை, திருச்சி - ஈரோடு, மதுரை-ராமேஸ்வரம், தஞ்சாவூர் - காரைக்கால் ஆகிய பாதைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இதிலும் குறிப்பாக தஞ்சாவூர் - விழுப்புரம் பாதை உடனடியாக இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட வேண்டிய பாதை ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory