» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர்களின் இடை நிற்றல் சதவீத உயர்வை மறைத்த அமைச்சர் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வியாழன் 6, பிப்ரவரி 2020 4:00:47 PM (IST)

மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் சூழலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கடந்த மூன்று வருடங்களில் 9  மற்றும் 10 வகுப்பு கல்வியைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் (இடை நிற்றல்) எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்து விட்டது” என்று, அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்விக்கு ஏற்பட்டுவரும்  பரிதாபகரமான நிலை குறித்து, நாடாளுமன்றத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றல் சதவீத உயர்வை அப்படியே மறைத்து, பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை அறிவித்திருக்கிறார். பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முதலில் செயல்படுத்திட வேண்டும் என்ற மோகத்திலும், வேகத்திலும், 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடர்ந்திருந்தால் எத்தகைய பாதிப்புகளை மாணவர் சமுதாயம் சந்திக்க நேர்ந்திருக்கும்? அது பற்றிய கவலை எல்லாம் பள்ளிக் கல்வி அமைச்சருக்கும் இல்லை; முதல்வருக்கும் இதைப் பற்றியெல்லாம் ஆலோசிக்க நேரமில்லை. அவர்களுக்குக் கவலை எல்லாம், யாருடைய பாதம் பணிந்தாவது,  பதவியில் எப்பாடு பட்டேனும் தொடர வேண்டும் என்பது  மட்டுமே!

ஆகவே 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு  ஏழ்மை, பொருளாதார சூழ்நிலைகள் காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், பள்ளிக் கல்வியை வழங்குவதில் என்ன பிரச்னை இருக்கிறது? படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டுச் செல்வதற்கு அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு  காரணமா? என்பது போன்றவற்றை ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனைக் கேட்டுக் கொள்கிறேன்.

எதிர்காலத்தில் ஆரம்பக் கல்வியிலோ, இடை நிலைக் கல்வியிலோ, மேல் நிலைக் கல்வியிலோ ஒரு மாணவர் கூட பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் அபாயகரமான மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் எழாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியும், தமிழகத்தின் முன்னேற்றமும் எதிர்காலத் தலைமுறையாக  உள்ள மாணவர் சமுதாயத்திடம்தான் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து, எவ்விதத் தாமதமுமின்றி அதிமுக அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory