» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதன் 5, பிப்ரவரி 2020 11:02:42 AM (IST)

விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செந்தில்பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து அருண்குமார் என்பவர் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளார். சென்னை மற்றும் கரூரில் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்துக்கு சீல் வைத்தனர்.முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் புகாரில் தன்னுடைய பெயர் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எனக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக என்னை கைது செய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி நீதிபதி என்.சேஷசாயி முன் வெள்ளிக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.  அதேசமயம் ஓரிரு நாளில் முன் ஜாமின் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory