» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசியல் பற்றி கேள்வி கேட்காதீர்கள்! ‍ ராஜேந்திர பாலாஜி கெஞ்சல் - ஓபிஎஸ் கிண்டல்!!

புதன் 5, பிப்ரவரி 2020 10:52:08 AM (IST)

அரசியல் பற்றி கேள்வி கேட்காதீர்கள், துறை ரீதியாக வேண்டுமானால் கேள்வி கேளுங்கள் என்று கெஞ்சாத குறையாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சமீபகாலமாக பல்வேறு பிரச்சினைகளில் அதிரடியாக கருத்துகளை கூறி வருகிறார். ஆனால் அவை அவர் சார்ந்த அ.தி.மு.க. கட்சிக்கான கருத்தாக இருக்கவில்லை. சமீபத்தில் அவர் கூறி இருந்த மதம் சார்ந்த கருத்துகள் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு ஆளானது. அவர் மீது கவர்னரிடம் தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. கட்சி மற்றும் அரசுக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்துகளை கூறிவருவதாக அந்தக்கட்சியிலும், மற்ற அமைச்சர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜேந்திர பாலாஜி தலைமை செயலகத்துக்கு வந்திருந்தார். பின்னர் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பால்வளத்துறைக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அந்த கூட்டம் முடிந்த பின்பு நிருபர்கள் அவரை சுற்றி நின்று கேள்விகள் கேட்கத் தொடங்கினர். அதற்கு ராஜேந்திர பாலாஜி "என்னிடம் அரசியல் பற்றி கேட்காதீர்கள். அரசியல் கருத்துகளை கூறவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனவே என்னை விட்டுவிடுங்கள். துறை ரீதியாக வேண்டுமானால் கேள்வி கேளுங்கள்” என்று கெஞ்சாத குறையாக கூறியுள்ளார். பின்னர் துறை ரீதியான கேள்விகளுக்கு மட்டும் அவர் பதில் அளித்தார்.

இதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அதற்கு அவர், "ராஜேந்திர பாலாஜியிடம் போய் கேளுங்கள். அவர் பால் போல் பொங்குவார்” என நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory