» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. குடும்ப அரசியல் செய்கிறதா? மு.க.ஸ்டாலின் விளக்கம்

ஞாயிறு 17, நவம்பர் 2019 7:45:11 PM (IST)

திமுகவில் குடும்ப அரசியல் செய்கிறார்கள் ஏன் என்றால்? குடும்பம் குடும்பமாக பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க. என்று சேலத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் , "திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்" என்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டார். அதன்பின், விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே போன்ற முட்டாள்தனமானதுதான் மிசா விவாதமும். மிசா சட்டத்தில் நான் மட்டுமா சிறையில் இருந்தேன்? 

1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. டில்லியில் இருந்து சில தூதுவர்கள் வந்தார்கள். நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக் கூடாது, ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை; ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் உங்கள் ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும். நீங்கள் எதிர்த்தால், உங்கள் ஆட்சியை அடுத்த விநாடியே கவிழ்த்துவிடுவோம். என்று வந்த தூதுவர்கள் சொன்னார்கள். எங்கள் உயிரே போனாலும் நாங்கள் என்றைக்கும் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்கமாட்டோம் – ஜனநாயகத்தின் பக்கம்தான் நிற்போம் என்று தலைவர் கலைஞர் வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்.

அதற்குப்பிறகு, சென்னை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். கைது செய்து சிறை வைத்திருக்கும் தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று படித்துவிட்டு, வந்திருந்த மக்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து வழிமொழிய வைத்தார்.

அதனையடுத்து, 1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்படுகிறது. கழகத்தைச் சேர்ந்த எங்களைப் போன்ற பலரும் கைது செய்யப்படுகிறார்கள். நான் பிப்ரவரி 2ஆம் தேதி கைது செய்யப்படுகிறேன்.. பிப்ரவரி மாதம் 6ஆம் நாள் வீரபாண்டியார் மூத்த மகள் மகேஸ்வரி - காசி ஆகியோர் திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைக்க வேண்டும். இந்த நிலையில் வீரபாண்டியாரை அழைத்து கலைஞர் சொல்கிறார்.

இந்த திருமணத்தை நான் நடத்தி வைக்க வந்தால், உடனே உன்னைக் கைது செய்துவிடுவார்கள். அதனால் முன்னணியினரை வைத்து நீயே நடத்தி விடு என்று தலைவர் சொல்கிறார். எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வந்து தான் நடத்த வேண்டும் என்கிறார் வீரபாண்டியார். ஆனால் கலைஞர் கலந்து கொள்ளவில்லை.திருமணம் முடிந்ததும் மணமக்கள் சொந்த ஊருக்கு மறுவீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் வழிமறிக்கப்பட்டு, வீரபாண்டியார் கைது செய்யப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கலைஞரின் தளபதி என்பதற்காக வீரபாண்டியார் கைது செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தினர் அனுபவித்த சித்ரவதைகள் சொல்லி மாளாதவை! மதுரைச் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரபாண்டியாரை கையில் விலங்கு போட்டு ரயில் கம்பியில் பிணைத்து, உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால், குடும்பம் குடும்பமாக இக்கட்சிக்கு உழைத்தார்கள். குடும்பம் குடும்பமாக பாடுபட்டார்கள். குடும்பம் குடும்பமாக சிறைக்கு சென்றார்கள்!

வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு வழங்குவதில் தலைவர் கலைஞர் காட்டிய உறுதியும் அதற்காக வீரபாண்டியார் எடுத்த முயற்சியும் விரிவாக இந்நூலில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. சின்னமும் கொடியும் யாருக்கு என்ற சர்ச்சை ஏற்பட்டு விட்டது. அவை  நம் கையை விட்டுப் போனால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை. தற்கொலை செய்துகொள்வேன் என்று கலைஞர் அழுதுள்ளார். அன்று காலை உணவு சாப்பிடவில்லை தலைவர். சின்னமும், கொடியும் நமக்குத்தான் என்று தீர்ப்பு வந்ததும், சிறுகுழந்தையைப் போல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாராம் தலைவர்.

இதனை வீர பாண்டியார் எழுதிய இந்நூலில் படிக்கும்போது கழகத்தின் முன்னணி வீரர்கள் 100 பேர் இதுபோன்ற வரலாற்றை எழுதினால் அதுதான் திமுக வரலாறு! என்பது திண்ணமாகிறது. வீரபாண்டியாரைப் போல ஏராளமான வீரபாண்டியார்கள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். அப்படி உருவாக்குவதற்கான பாடப்புத்தகமாக இந்நூல் அமைந்துள்ளது. நம்முடைய பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கிறோம். அவற்றை விளக்கிச் சொல்லும் வகையில் நேற்று முதல் ‘கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை’ தமிழகம் முழுவதும் நடத்த தொடங்கி இருக்கிறோம். அது தொடரப் போகிறது!

இன்று தமிழ்நாட்டில் இருக்கும் அநியாய ஆட்சியை விரட்டுகிற வரையில் அந்தப் போராட்டத்தை நாம் தொடருவோம்! அது அண்ணன் வீரபாண்டியார் மீது நாம் எடுக்கின்ற உறுதியாக சபதமாக இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். வணக்கம். இவ்வாறு,  மு.க. ஸ்டாலின் பேசினார்.


மக்கள் கருத்து

உண்மைNov 18, 2019 - 10:58:24 AM | Posted IP 108.1*****

வந்தேறி தெலுங்கு கட்டுமர குடும்பம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory