» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு அக்.23‍ல் துவக்கம் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

வியாழன் 19, செப்டம்பர் 2019 4:53:53 PM (IST)

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு அக்.23ம் தேதி தொடங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்படுவர். 

எனவே பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது, மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திட்டமிட்டபடி ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் கடந்த ஆண்டைப் போல தாம்பரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். வேலூர், காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன. 

மதுரை, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டப் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்தார்.ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், அங்கு பேருந்து நிலையம் இயக்கப்படுமா என்பது குறித்து அடுத்தகட்ட ஆய்வுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். தீபாவளி பேருந்துகளுக்காக ஆகஸ்ட் 23ம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் மாதம் 23ம் தேதி தொடங்கும். 

அதேப்போல, தமிழகத்தில் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் மட்டுமல்லாமல், பெங்களுருவில் பணியாற்றும் தமிழர்களும் சொந்த ஊருக்குச் சென்று வர சிறப்புப் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு அதற்குண்டான முடிவுகள் எட்டப்படும். சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் பண்டிகை முடிந்து ஊர் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தீபாவளி பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தில் நகர்ப் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory