» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தியான மண்டம்: ஆளுநர் திறந்து வைத்தார்

வியாழன் 12, செப்டம்பர் 2019 4:28:52 PM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த தியான மண்டபத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து அருள்திரு அடிகளார் அவர்களின் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக காலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடந்தேறியது. இவ்விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் காலை 11.30 மணிக்கு சித்தர் பீடம் வந்தடைந்தார். அவருக்கு சித்தர் பீடத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் கருவறைக்கு சென்று ஆதிபராசக்தி அம்மனை ஆராதனை செய்து வழிபட்டார். பின்னர் 11.45 மணியளவில் தியான மண்டபம் வந்தடைந்த ஆளுநர் தியான மண்டபத்தின் தரைத்தளத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தரைத்தளத்தில் புகைப்படத் தொகுப்பு கலைக் காட்சிக் கூடமும், மையத்தில் மகாமேருவும் நிறுவப்பட்டிருந்ததை பார்வையிட்டு குத்துவிளக்கேற்றிய பின்னர் தியான மண்டபத்தின் முதல் தளத்திற்கு சென்று முதல் தள அமைப்பைப் பார்வையிட்டார். 

முதல் தளத்தின் மேற்கூரையில் 9 நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் மூன்று சக்கரங்களுக்குள் வடிவமைக்கப்பட்டிருந்தது. தியான மண்டப சுவற்றில் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. பக்கவாட்டு சுவர்களில் 18 சித்தர்களின் உருவச்சிலைகளும் அமைக்கப்பட்டு, நவகிரகங்களின் உருவங்களும், சப்த கன்னியர் உருவங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மையத்தில் பீடமும் அதன் மேல் விளக்கும் நிறுவப் பட்டிருந்தது. பின்னர் ஆளுநர் தியான மண்டபத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.பின்னர் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் மூலமந்திரத்துடன் துவங்கியது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறங்காவலர் வெங்கடசாமி வரவேற்புரை ஆற்றினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவர்கள் நினைவு பரிசை வழங்கினார். தொடர்ந்து ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவர்களுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர்கள் அன்பழகன் மற்றும் செந்தில்குமார் நினைவு பரிசினை வழங்கினார்கள். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அவர்களுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர்கள் திருமதி ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் திருமதி உமாதேவி ஜெய்கணேஷ் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினார்கள். பகல் 12 மணிக்கு இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆற்றிய ஏற்புரையில் "கருவறை அம்மன் வலது கையில் தாமரையும், இடது கையில் சின்முத்திரையும் கொண்டு புன்னகை தவழும் முகத்துடன் கம்பீரமாக தாமரை பீடத்தில் அமர்ந்து அருளாசி வழங்கும் ஆதிபராசக்தி அம்மனை நான் வணங்கியது மகிழ்ச்சிக்குரியது. அருள்திரு பங்காரு அடிகளாரின் ஐம்பது வருட ஆன்மிக வாழ்க்கையை பாராட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆன்மிகத்திற்கு பத்மஸ்ரீ விருதை இந்த ஆண்டு வழங்கி கௌரவித்தது மிகச்சிறப்புக்குரியது. அவரது இந்த ஐம்பது வருட நீண்ட கால சேவைக்காக கூடிய விரைவில் அவருக்கு பத்மபூஷண் விருது கிடைத்திட வேண்டுகிறேன்.அவர் கல்வி, மருத்துவ,ஆன்மிகப் பணிகளை ஆற்றுவது மிகச்சிறப்புக்குரியது. ஆன்மிகத்தில் ஜாதி, மத பேதமின்றி பெண்கள் அனைவரும் கருவறைக்கு சென்று அவர்களே வழிபடுவது போற்றுதலுக்குரியது. இன்று நான் அம்மா மட்டுமின்றி இந்த தியான மண்டபத்திற்காக இரவும் பகலும் பாடுபட்ட திருமதி இலட்சுமி பங்காரு அடிகளார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டுகிறேன். ஆன்மிகசேவையில் அவர் ஆற்றிடும் 1000 படுக்கை வசதி கொண்ட பன்நோக்கு மருத்துவமனை சீரிய முறையில் செயல்பட்டு சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் பயன்பெறுவது மிகவும் பாராட்டுக்குரியது என்று உரை ஆற்றினார்.

ஆன்மிகத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் மனஅமைதிக்கும், மனஉறுதிக்கும் தியான மண்டப வளாகம் மேல்மருவத்தூரில் இன்று திறந்து வைத்துள்ளார். இணைச்செயலாளர் சுரேந்திரநாத் நன்றியுரையாற்றினார். பின்னர் மாலை 6 மணிக்கு ஒலி ஒளி மற்றும் இசை நடன நீர் ஊற்றுக் காட்சி சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் சித்தர்பீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory