» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் தீவிர கண்காணிப்பு: தேவாலயங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!!

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2019 9:37:37 PM (IST)

பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக கோவை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று சர்ச்சுகளுக்கு பெருமளவு கிறிஸ்துவர்கள் வழிபட வருவார்கள் என்பதால் எல்லா சர்ச்சுகளிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தமிழகத்திலும் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து தமிழகத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவினர் மூலம் தெரியவந்தது. இந்த பயங்கரவாதிகள் கோவையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக 6 பயங்கரவாதிகளும் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை முறியடிக்க கோவை முழுவதும் போலீசார் முடுக்கிவிடப்பட்டனர். கமாண்டோ படையினரும் கோவை முழுவதும் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றித்திரிந்தால் அதுபற்றி பொது மக்கள் போலீசுக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோவையில் ஊடுருவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்கிற தகவலும் வெளியானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். கிறிஸ்தவர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படும். இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கோவை முழுவதும் இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சோதனை நடத்தப்பட்டது. நேற்று இரவு கோவை மாநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். பிரார்த்தனைக்கு வந்தவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாநகர எல்லை பகுதியில் உள்ள 10 சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் மற்றும் கோவையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேரடி மேற்பார்வையில் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண், துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory