» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சடலத்தை கயிறு கட்டி பாலத்தில் இருந்து இறக்கிய விவகாரம் : உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 3:44:23 PM (IST)

சடலத்தை கயிறு கட்டி பாலத்தில் இருந்து இறக்கிய விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனி பகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு என்று தனியாக மயானம் இல்லை. அதனால், ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தைதான் சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இங்கு வசித்து வந்த 55 வயதுடைய குப்பன் என்பவர், கடந்த 18ந்தேதி எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார். வழக்கமான சுடுகாட்டில் பிணத்தை எரிக்க வசதியில்லை. அதனால் குப்பனின் உறவினர்கள், பாலாற்றங்கரையோரம் அரசின் அதிகாரபூர்வமற்ற சுடுகாடு உள்ளதால், அங்கு கொண்டு சென்று எரிக்கலாம் என்று முடிவு செய்து சடலத்தை கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் அவ்வழியாக உள்ள நில உரிமையாளர்கள் வழிவிட மறுத்தனர். இதையடுத்து வேறுவழியின்றி குப்பனின் பிணத்தை பாடை கட்டி 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கி, பாலாற்றின் கரையோரம் தகனம் செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி, தமிழக-ஆந்திர எல்லை பகுதியான ஜவ்வாதுராமசமுத்திரம் பகுதியில் உள்ள பனந்தோப்பு இடத்தில் அரசுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் ஆதி திராவிடர் காலனி மக்களுக்காக மயானத்துக்கு 50 சென்ட் இடத்தை ஒதுக்கீடு செய்தார். இதை தவிர அங்கு தகனமேடை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் இது சம்பந்தமாக தானாக வந்து வழக்கை பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், "இறந்த குப்பனின் பிணம் சாதி பாகுபாட்டின் காரணமாக பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், தாமாக முன்வந்து வழக்கினை பதிவு செய்துள்ளனர். எனவே இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக கலெக்டரிடமும் விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory