» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி சாவு பெரம்பலூரில் பரிதாபம்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 10:11:29 PM (IST)

பெரம்பலூரில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த  சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் ஆலம்பாடி பிரிவு ரோடு, அன்னை நகரை சேர்ந்தவர் தர்மராஜ், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சசிதேவி. இவர்களது மகன் ரெங்கநாதன் ( 4). நர்மதாஸ்ரீ (1½) என்ற மகளும் இருக்கிறாள். ரெங்கநாதன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். 

இந்நிலையில் சசிதேவி, ரே‌ஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காக அருகே உள்ள கணினி மையத்திற்கு புறப்பட்டார். அப்போது ரெங்கநாதன், தானும் வருவதாக அடம் பிடிக்கவே சசிதேவி, என்ன செய்வதென்று தெரியாமல் ரெங்கநாதனுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, வீட்டில் விட்டு செல்லலாம் என்று எண்ணி, அருகில் உள்ள கடைக்கு சென்று ஜெல்லி மிட்டாயை வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் ரெங்கநாதனை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது ஜெல்லி மிட்டாயின் பாதியை ரெங்க நாதன் சாப்பிட்டுள்ளான். வீட்டிற்கு சென்றதும், மகனை கீழே இயக்கி விட முயன்றபோது அவன் எந்த வித அசைவும் இல்லாமல் இருந்ததை கண்டு சசிதேவி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், உறவினர்கள் உதவியுடன் மகனை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக பெரம்ப லூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ரங்கநாதனை பரிசோதித்த டாக்டர்கள், ரெங்கநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சசிதேவி மற்றும் அவரது உறவினர்கள் ரங்கநாதனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காலாவதியான ஜெல்லி மிட்டாயை தின்றதால் சிறுவன் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆசையாக வாங்கிய ஜெல்லி மிட்டாயை அவசரமாக தின்றதால் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ரெங்கநாதன் உடல் பிரேத பரிசோதனைக் காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சவுமியா சுந்தரி மற்றும் அதிகாரிகள் சீனிவாசன், ரத்தினம், இளங்கோ ஆகியோர் நேற்றிரவு சிறுவன் சாப்பிட்ட ஜெல்லி மிட்டாயை ஆய்வு செய்தனர். கெட்டுபோன மிட்டாயா? அல்லது அதில் சுவையூட்டுவதற்காக கெமிக்கல் ஏதும் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

இதுபற்றி டாக்டர் சவுமியா சுந்தரி கூறுகையில், சிறுவன் சாப்பிட்ட ஜெல்லி மிட்டாய் காலாவதியான மிட்டாய் இல்லை. ரெங்கநாதன் அழுது கொண்டு ஜெல்லி மிட்டாயை சாப்பிட்டுள்ளான். ஜெல்லி என்பதால் சிறுவனின் மூக்கில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. ஜெல்லி மிட்டாயில் கெமிக்கல் ஏதும் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறோம். சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார். ஜெல்லி மிட்டாய் வாங்கி தின்ற 4 வயது சிறுவன் இறந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory