» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அத்திவரதரை இடம் மாற்ற பரிசீலனை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

திங்கள் 22, ஜூலை 2019 12:24:28 PM (IST)

அத்திவரதரை இடம் மாற்ற பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் தரிசனத்துக்கு வருகின்றனர் என்பதாலும், அத்திவரதர் வைக்கப்பட்டிருக்கும் இடம் குறுகிய பகுதியாக இருப்பதாலும் பக்தர்கள் வசதிக்காக அத்திவரதரை இடமாற்றம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் அத்திவரதர் தரிசனத்தின்போது நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாகவும் இன்னும் 25 நாட்கள் வரை அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என்பதாலும் பக்தர்களுக்குப் போதுமான வசதிகளைச் செய்துகொடுக்க அனைத்து தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் சேலத்தில் நேற்று (ஜூலை 21) நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அத்திவரதரை இடமாற்றம் செய்வது குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

அதற்கு, "அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம். அங்குள்ள கோயில் அர்ச்சகர்களிடம் இதுகுறித்து பேசினோம். அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் மன நிம்மதியுடன் தரிசிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், இதுதொடர்பாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களிடம் என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து ஆராய்ந்து, அவர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்ற தகவலைத் தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அணை பாதுகாப்பு மசோதா குறித்த கேள்விக்கு, "அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கனவே கொண்டுவரப்பட்டபோது அதிமுக எதிர்த்து, அதை நிறைவேற்ற முடியாத சூழலை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் கொண்டுவரப்படும் நிலையில், அதிமுக எம்.பி.க்கள் அதை எதிர்த்து குரல் கொடுப்பார்கள். நமது மாநிலத்துக்கு உகந்த ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தால் அதை ஏற்போம். இல்லையெனில் தொடர்ந்து எதிர்ப்போம்” என்று பதிலளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory