» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜரராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.இரஞ்சித்திற்கு முன்ஜாமீன்

செவ்வாய் 25, ஜூன் 2019 5:18:19 PM (IST)

ராஜரராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு  முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர் பாரூக் நினைவுநாள் பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித், ராஜராஜ சோழனைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைத் தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து இரஞ்சித்தின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்திலும், இளைஞர்கள் மனதில் தீய எண்ணத்தை விதைக்கும் வகையிலும் உள்ளது.  எனவே, இரஞ்சித்தைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் பாலா திங்கள்கிழமை புகார் அளித்தார். அதேபோல் திருப்பனந்தாள் உள்ளிட்ட சில இடங்களிலும் இரஞ்சித் மீது வழக்குகள் தொடரப்பட்டன

இதையடுத்து இரஞ்சித் மீது  இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பேசியது), 153(ஏ), (1) (எ) (பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை உருவாக்கி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தகவல் அடிப்படையிலேயே அவ்வாறு பேசியதாக இயக்குநர் பா. இரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இரஞ்சித் பேசி ஒரு வாரம் கழித்தே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதேநேரம் எதிர்காலத்தில் இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory