» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேகதாது அணை கட்டமத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

செவ்வாய் 25, ஜூன் 2019 8:46:01 AM (IST)

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகம் ஒப்புதல் கேட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது: மேகதாது அணைக்கட்டு மற்றும் குடிநீர் திட்டத்துக் கான சுற்றுச்சூழல் அனுமதிக் காக வரையறைகளை வெளியிடுவதற்கு கர்நாடக மாநிலத்தின் நீராவரி நிகாமா நியமிதா அமைப்பின் திட்டத்துக்கு அனுமதி மறுப்புக்காக நீங்கள் அவசரமாக தலையிடக்கோரி இந்த கடிதத்தை எழுதுகிறேன். மேகதாது அணை திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை காவிரி நீர்தாவா நடுவர் மன்ற தீர்ப்புக்கும், 16.2.2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கும் எதிரானது. கர்நாடக அரசின் இந்த திட்டத்தை தள்ளுபடி செய்ய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்துக்கு உத்தரவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப, கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட நிர்ணயிக்கப்பட்ட அணை இது அல்ல என்பதால், மேகதாது அணை திட்டம் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை. மேலும், தமிழ்நாடு மற்றும் மற்ற காவிரி வடிகால் மாநிலங்களின் முன் ஒப்புதலை கர்நாடகம் பெறவில்லை. காவிரி ஒரு பற்றாக்குறை வடிநிலை என்ற வகையில் மேல் பகுதியில் மேகதாது அல்லது வேறு எந்த திட்டத்தை நிறைவேற்றினாலும், கடைமடை மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு திருத்தி அமைத்த காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கேற்ப, உரிய பங்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

மேலும், இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு முன்பு நிலுவையில் இருக்கிறது. இதை கடந்த 15.6.2019 அன்று உங்களிடம் கொடுத்த மனுவிலேயே தெரிவித்து இருக்கிறேன். இத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டத்துக்கான வரைமுறையை வழங்குவதற்கான கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் பரிசீலிக்க வேண்டாம் என்று உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், மத்திய நீர்வள அமைச்சகம் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து அனுப்பவும், தமிழக அரசு மற்றும் பிற காவிரி வடிகால் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், ஜல சக்தி அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory