» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காசிமேடு மீனவர்கள் 7 பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்

திங்கள் 24, ஜூன் 2019 5:14:31 PM (IST)

கரை திரும்பாத காசிமேடு மீனவர்கள் ஏழு பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏழு பேர் கடந்த 20 நாட்களாகக் கரை திரும்பாதிருப்பது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அச்சத்தையும், மனக்கலக்கத்தையும் ஏற்படுத்தி அக்குடும்பத்தினரின் மன நிம்மதியை முழுவதுமாகக் குலைத்திருக்கிறது. 

கடந்த 04ஆம் தேதியன்று நந்தா என்பவருக்குச் சொந்தமான 2 எஞ்சின் பொருத்தப்பட்ட பெரிய பைபர் படகில் ஆந்திர கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற பால்ராஜ் (50), ஸ்டீபன் (32), துரை (55), கருத்தக்கண்ணு (65), புகழேந்தி (59), மதி (59), மதி (50) ஆகிய எழுவரது தகவல்தொடர்பும் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு, இதுவரை அவர்கள் வீடுதிரும்பவில்லை. அவர்களின் படகு ஆந்திரக் கரையோரப் பகுதியில் ஒதுங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மீனவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர். இன்றுவரை தங்களது குடும்பத்தினரைத் கண்டுபிடித்துத் தரக்கோரி அறவழியில் போராடி வருகின்றனர்.

விஞ்ஞானத்தில் வியத்தகு சாதனைகளைச் செய்து வருகிற இந்நாட்டில், தொழில்நுட்பங்களால் நிறைக்கப்பெற்ற இந்நூற்றாண்டில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏழு பேர் காணாமல் போய் 20 நாட்கள் ஆகியும் அவர்களைக் கண்டறிய முடியாதிருப்பது அப்பட்டமான அரச நிர்வாகத்தின் படுதோல்வியையும், அலட்சியப் போக்கையுமே வெளிக்காட்டுகிறது. இந்நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கை ஈட்டித் தரும் மீனவப் பெருங்குடி மக்கள் நாள்தோறும் படும் அல்லல்கள் ஒவ்வொன்றும் சொல்லிமாள முடியாதவை. 

ஒவ்வொரு நாளும் எண்ணற்றத் துன்பத் துயரங்களைச் சிக்கி, உயிரை பணயம் வைத்தே அவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அத்தகைய மீனவர்களின் உயிரையும், அவர்களது வாழ்வாதார உரிமைகளையும் பேணிக்காக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். ஆகையினால், இவ்விவகாரத்தில் மாநில அரசும், மத்திய அரசும் அலட்சியப்போக்கைக் கைவிட்டு பெருங்கவனமெடுத்து காணாமல் போன மீனவர்களை மீட்கத் துரித நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு எழுவரையும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory