» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிக்டாக் மோகத்தால் விஷம் குடித்து உயிரை மாய்த்த இளம்பெண்: கணவர் கண்டித்ததால் விபரீத முடிவு

வியாழன் 13, ஜூன் 2019 10:39:54 AM (IST)

கணவர் கண்டித்ததால் விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ‘டிக்-டாக்’ போன்ற செயலிகளுக்கு இளைஞர்கள் இளம்பெண்கள் பலர்அடிமையாக உள்ளனர். இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப பெண்களும் அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் ‘டிக்-டாக்’ செயலிக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்ப பெண் அடிமையாகி விஷம் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (24). 

பட்டதாரியான இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பழனிவேல், சிங்கப்பூரில் கூலி வேலை பார்த்து வருவதால் கணவர் ஊரான சீராநத்தத்தில் தனது 2 குழந்தைகளுடன் அனிதா தனியாக வசித்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கணவர் அனுப்பும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக ‘டிக்-டாக்’ செயலி எட்டி பார்த்தது. அந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா பின்னர் அதிலேயே மூழ்கி போனார்.

இதனை பார்த்த உறவினர்கள், அனிதாவின் செயல்பாடு குறித்து சிங்கப்பூரில் இருக்கும் கணவரிடம் தெரிவித்தனர். அவர், தனது மனைவியை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகள் மோனிகா கீழே விழுந்து காயம் அடைந்தார். காயமடைந்த மகளை கூட சரிவர கவனிக்காமல் ‘டிக்-டாக்’ செயலில் அனிதா மூழ்கி இருந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த பழனிவேல் ஆத்திரத்தில் மனைவி அனிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். அதனை தனது கடைசி விருப்பமாக ‘டிக்-டாக்’ செயலி மூலம் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பூச்சிக்கொல்லி மருந்தை முதலில் குடிக்கும் அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். அடுத்த சில வினாடியில் வாந்தி எடுக்கிறார், மறுபடியும் தண்ணீர் குடிக்கிறார், வாந்தி எடுக்கிறார். அடுத்த சில வினாடிகளில், அவரது கண்கள் மயக்க நிலையை அடைகிறது. பின்னர் வாயை துடைத்து விட்டு, சிரித்தவாறு அந்த வீடியோவை ‘டிக்-டாக்’ செயலில் பதிவிடுகிறார். இவ்வாறு அந்த வீடியோ சுமார் 43 வினாடிகள் ஓடுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த அருகில் இருந்தவர்கள் அனிதாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.அனிதா விஷம் குடித்த தகவல் அறிந்து கணவர் பழனிவேலு சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சொந்த ஊர் வந்தார். இதுதொடர்பாக அனிதாவின் தாய் தங்கமணி கொடுத்த புகாரின்பேரில், குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த அனிதா, ‘டிக்-டாக்’ செயலி மூலம் நடனமாடுவது, பாடல் பாடுவது, அலங்காரம் செய்து கொண்டு தன்னை அழகாக காட்டுவது போன்றவை உள்பட 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து பதிவிட்டுள்ளார். அதற்கு விருப்பம் (லைக்) அள்ளி குவித்து வந்தார். தனது சந்தோஷத்தை ‘டிக்-டாக்’கில் பகிர்ந்து வந்த அனிதா, இறுதியில் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதையும் அதே ‘டிக்-டாக்’கில் பதிவிட்டார். இந்த சம்பவம் அவரை பின் தொடர்ந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory