» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - போஸ்ரால் பரபரப்பு!!

புதன் 12, ஜூன் 2019 10:46:58 AM (IST)

"அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்" என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ள போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. 

இந்நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது. அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) நடைபெறுகிறது. 

இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக அலுவலகம் வெளியே முதல்வர் பழனிசாமியே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory