» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடுமையாக துன்புறுத்தி வெயிலில் நிறுத்தப்பட்ட 5வயது சிறுமி உயிரிழப்பு: பெற்றோர் கைது!!

செவ்வாய் 21, மே 2019 3:46:54 PM (IST)

திருச்சி அருகே 5 வயது சிறுமியை கடுமையாக துன்புறுத்தி கொலை செய்ததாக சிறுமியின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். (39). இவரது மனைவி நித்தியகமலா (35). முத்துப்பாண்டியன் உடற்கல்வி ஆசிரியர் ஆவார். நித்திய கமலா ஆசிரியை படிப்பு முடித்துள்ளார். இவரது மகள் லத்திகாஸ்ரீ (5), நேற்று வீட்டில் படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்ததால் லத்திகாஸ்ரீயை அவரது பெற்றோர் குக்கர் மூடியால் கண் மூடித்தனமாக அடித்ததோடு, அவளை வீட்டின் வெளியே வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது.

இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை நித்தியகமலாவும், முத்து பாண்டியனும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே படிக்காமல் டி.வி., பார்த்த மகளை தாயே சரமாரியாக அடித்து வெயிலில் நிற்க வைத்து கொடூரமாக கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கோடை விடுமுறையில் பள்ளி இல்லாத நிலையில் மதியம் 12 மணிக்கு படிக்காததால் பெற்ற மகளை தாய் அடித்து வெயிலில் நிற்க வைத்து துன்புறுத்தி கொலை செய்வாரா? இதற்கு வேறு காரணம் உள்ளதா? என காட்டுபுத்தூர் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆசிரியை நித்தியகமலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கீழபாடி தாலுகா அழகிரி கவுண்டனூர் என்ற கிராமம் சொந்த ஊராகும். இவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பிரசன்னா என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு லத்திகாஸ்ரீ பிறந்துள்ளார். மகள் பிறந்தது முதல் பிரசன்னாவுடன் தொடர்ந்து நித்திய கமலாவுக்கு பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நித்தியகமலா பிரசன்னாவை விட்டு பிரிந்து விட்டார். 2016-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் முத்து பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில்தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகருக்கு 2-வது கணவர் முத்துப்பாண்டியன், மகள் லத்திகாஸ்ரீ ஆகியோருடன் நித்தியகமலா குடி வந்துள்ளார். உடற்கல்வி ஆசிரியரான முத்துப் பாண்டியன் லத்திகாஸ்ரீயை அடிக்கடி கடுமையான உடற்பயிற்சியை செய்யக்கூறி கொடுமைப்படுத்துவாராம். 

நேற்று மதியம் 12 மணிக்கு நித்தியகமலா ஆசிரியை வேலை வி‌ஷயமாக பயோடேட்டா தயார் செய்வதற்காக ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் முத்துப்பாண்டியனும் லத்திகாஸ்ரீயும் இருந்துள்ளனர். லத்திகாஸ்ரீயை முத்துப்பாண்டியன் சில கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய கூறியுள்ளார். லத்திகாஸ்ரீ செய்யாததால் அவரை தென்னை மட்டையால் முதுகில் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் வெயிலிலும் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் வெயில் தாங்க முடியாமல் லத்திகாஸ்ரீ மயங்கி விழுந்துள்ளார். கடைக்கு சென்று விட்டு திரும்பிய நித்தியகமலா லத்திகாஸ்ரீ மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து கணவர் முத்துப்பாண்டியனிடம் கேட்ட போது , அவர் டிபன் வாங்கி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகுதான் நித்திய கமலா மகள் லத்திகாஸ்ரீயை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்ற போராடியுள்ளார். ஆனால் தென்னை மட்டையால் கடுமையாக தாக்கப்பட்டதாலும், வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாலும் உடல் நிலை மோசமடைந்து லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்து விட்டாள். இதைத்தொடர்ந்து ஆசிரியர் முத்துப்பாண்டியனை போலீசார் வலைவீசி தேடினர். நேற்றிரவு சேலத்தில் பதுங்கி இருந்த போது காட்டுப்புத்தூர் போலீசில் முத்துப்பாண்டியன் சிக்கினார். முத்துப் பாண்டியன் , நித்திய கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory