» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

திங்கள் 20, மே 2019 10:25:28 AM (IST)

தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: தமிழ் நாட்டில் கன்னியாகுமரியில் ஜூன் 2-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தற்போது தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமானைத் தொட்டுள்ளது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக செல்லும். அவ்வாறு செல்லும்போது கன்னியாகுமரி வழியாக, திருவனந்தபுரம், கொச்சி அரபிக்கடல் பகுதிக்குச் செல்லும். பின்னர் கொல்கத்தா வழியாகச் செல்லும். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் 6-ம் தேதி வாக்கில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள் முன்னரோ, பின்னரோ கூட ஆகலாம். எப்படியாயினும், ஜூன் 10-ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக கடற்கரைக்கு மேலே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உள்ளது. அதன்காரணமாக ஏற்பட்டுள்ள வெப்ப சலனத்தால் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பம் இயல்பைவிட2 முதல் 3 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கும். அனல் காற்றும் வீசும். எனவே, பொதுமக்கள் பகல் 11 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் குறைந்தபட்ச வெப்பம் 84.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ஏற்காட்டில் 20 மிமீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, கூடலூர் பஜாரில் தலா 10 மிமீ மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்ச வெப்பம் திருத்தணியில் 107 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. சென்னை விமான நிலையம், தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory