» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேளாங்கண்ணி திருவிழா: நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில் இயக்க பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 29, ஜூலை 2026 5:41:23 PM (IST)

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்குச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் (KKDRUA) தெற்கு ரயில்வேக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தொடங்கிச் செப்டம்பர் முதல் வாரத்தில் நிறைவடைகிறது. இத்திருவிழாவிற்குத் திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் செல்வது வழக்கம்.
தற்போது குமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்குச் செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. திருச்சியில் ரயில் மாறிச் செல்வதற்கும் ஏற்ற இணைப்பு ரயில்கள் கால அட்டவணையில் இல்லாததால், பக்தர்கள் பேருந்துகளிலும் தனியார் வாகனங்களிலுமே சிரமப்பட்டுப் பயணிக்கின்றனர்.
தற்போது இயக்கப்பட்டு வரும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இருமுறை வாராந்திர ரயிலும், மற்றொரு வாராந்திர ரயிலும் புனலூர், செங்கோட்டை வழியாகச் செல்கின்றன. இதனால் திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டப் பயணிகளுக்கு எவ்விதப் பயனும் இல்லை.
முந்தைய ஆண்டுகளில் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலும் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதாலும், மோசமான கால அட்டவணையினாலும் போதிய ஆதரவின்றி ரத்து செய்யப்பட்டது.
பயணிகள் சங்கத்தின் கோரிக்கைகள்:
திருவனந்தபுரம் / கொச்சுவேலி இணைப்பு: திருவனந்தபுரம்/கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில் டவுன் வழியாகச் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள குழித்துறை, பாறசாலை, இரணியல் பகுதி மக்களும் பயனடைவர்.
பகல்நேர சிறப்பு ரயில்: திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்குச் செல்லும் வகையில் குறைந்த தூரமும், குறைந்த பயண நேரமும் கொண்ட பகல்நேரச் சிறப்பு ரயில் ஒன்றை அறிவிக்க வேண்டும்.
சிறப்பு ரயில்களை இயக்குவதற்குத் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு (GM) முழு அதிகாரம் உள்ளதால், பயணிகள் சங்கத்தின் இக்கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)


