» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி : அம்பையில் பரபரப்பு!!
வெள்ளி 27, ஜனவரி 2012 9:04:14 PM (IST)

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் சத்துணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் 34 பேருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பாசமுத்திரம் ஏவிஆர்எம்வி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மணிமுத்தாறு, ஆலடியூர், ஏர்மாள்புரம், பொட்டல், கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை மதியம் வழக்கம்போல் மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் சத்துணவு சாப்பிட்டனராம். பிற்பகலில் சத்துணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிமுத்தாறு, ஆலடியூர், பொட்டல் பகுதியை சேர்ந்த மாணவிகள் இசக்கியம்மாள் (12), நாகம்மாள் (13), ரம்யா (12), அபிராமி (12), மகாலட்சுமி (11), முத்துசெல்வி (12), மாலதி (13), பார்வதி (13), ஆனந்தப்ரியா (12), மகாமாரி (11), சுபஸ்ரி (12), ஜெயந்தி (12), சூர்யா (12), கிருஷ்ணப்ரியா (12), லலிதா (11), அருள்மேரி (12), இசக்கியம்மாள் (11), சுடலி (11), சண்முகப்ரியா (12), ஜெயமாலனி (12), முப்புடாதி (12), பேபிமுத்துமாரி (13), கவிதாப்ரியா (12), ஆனந்தவள்ளி (12) ஆகிய 24 மாணவிகள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
பள்ளிக்கு சென்ற மாணவிகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாணவிகளை தேடி பெற்றோர் பள்ளிக்கு சென்றபோதுதான் மாணவிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது தெரியவந்தது. மாணவிகளின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகள் சிகிச்சை பெறுவது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என பெற்றோர்கள் புகார் கூறினர்.
மருத்துவமனைக்கு வந்த சேரன்மகாதேவி துணை ஆட்சியர் பாஜிபஹாரே ரோஹ்னிராமதாஸ் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். சோறு, முட்டை ஆகியன சரியாக வேகவில்லை என மாணவிகள் புகார் கூறினர். மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் மலர்சாந்தியிடம் கேட்டறிந்தார்.
சத்துணவு அமைப்பாளர் சொர்ணமணி, சமையலர் ஆவுடையம்மாள், உதவியாளர் பொன்னம்மாள், பள்ளி தலைமையாசிரியர் தங்கராஜா ஆகியோரிடம் துணை ஆட்சியர் விசாரணை நடத்தினார். சத்துணவு அமைப்பாளர் தாமதமாக பணிக்கு வந்ததாலும், காய்ந்த விறகு கிடைக்காததால் சமையல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு சோறு சரியாக வேகவில்லை என சமையலர் புகார் கூறினார்.
துணை ஆட்சியருடன் வட்டாட்சியர் ஆ. சிவகாமி, துணை வட்டாட்சியர் எஸ். திருநாவுக்கரசு, டி.எஸ்.பி இரா. பாண்டியராஜன், காவல் ஆய்வாளர் சி. சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை, கிராம நிர்வாக அலுவலர் சட்டநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு மாநில வீட்டுவசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன், ஊராட்சி ஒன்றியத் தலைவி ந. முருகேஸ்வரி, நகராட்சித் தலைவி வே. செல்வி உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சத்துணவு அமைப்பாளர் சொர்ணமணி, சமையலர் ஆவுடையம்மாள், உதவியாளர் பொன்னம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய ஆணையாளரை துணை ஆட்சியர் கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று துணை ஆட்சியர் ரோஹ்னிராம்தாஸ் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)


