» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு -7 ஆண்டு சிறை!!
சனி 28, செப்டம்பர் 2024 5:56:28 PM (IST)
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சாந்தி என்பவரது மகன் டேவிட். கடந்த 2015 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக 7 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாந்தி முக்கிய சாட்சி ஆவார். 14- 2 - 2017 அன்று சாந்தி தனது மகள் சகாய லதா உடன் வைத்தியநாதபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோட்டார் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சாந்தியிடம் உனது மகன் கொலை வழக்கில் எனக்கு எதிராக சாட்சி சொல்வாயா? என கேட்டு அறிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.
இது குறித்து சாந்தி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ரமேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று ரமேஷுக்கு கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.