» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் மீன் வாங்க அலைமோதிய மக்கள் : விலை உயர்ந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

ஞாயிறு 19, மே 2024 9:17:38 AM (IST)தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் விலை உயர்ந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வருகிற 21-ந் தேதி வரை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடியில் ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

ஆனால், நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பைபர் படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குச் சென்று வந்த நிலையில், பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று பெரும்பாலான நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

ஆனால், ஏற்கனவே திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். இதன் காரணமாக திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் நேற்று சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,200-க்கும், கீழி மீன் ஒரு கூடை ரூ.1,600-க்கும், விளை மீன் ரூ.500-க்கும், ஊளி மற்றும் பாறை மீன் ரூ.500-க்கும், அயிலேஷ் மீன் ரூ.200-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் ரூ.2,500-க்கு விற்ற ஒரு கூடை சாளை மீன் நேற்று ஆயிரம் ரூபாய் உயர்ந்து ரூ.3,500-க்கும், ரூ.1,500-க்கு விற்ற ஒரு கூடை வங்கனை மீன் ரூ.1,800-க்கும் விற்கப்பட்டது.

வழக்கம்போல் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் திரண்டனர். இதனால் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்தும் மீன்களை போட்டிப்போட்டு பொதுமக்கள் வாங்கியதால் விலை உயர்ந்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory