» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசை: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

வெள்ளி 30, செப்டம்பர் 2022 5:23:51 PM (IST)



குமரியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு சீர்வரிசையினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

குமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் திருவிதாங்கோடு துறப்பு எம்.எம். நினைவு மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா தலைமையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று (30.09.2022) நடைபெற்றது. நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி வழங்கினார். 

விழாவில் அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. இன்றைய தினம் அன்பு சசோதரிகளின் வளைகாப்பு நிகழ்ச்சியில் 2500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 50 தொகுதிக்கு ரூ.7.50 இலட்சம் மதிப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உண்டு என்ற சட்டத்தினை கொண்டு வந்தார்கள். டாக்டர் கலைஞர் அவர்களின் நல்வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களது வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கில் அவர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை ஏற்படுத்தி தந்து தமிழக பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்கள்.

இன்று நடைபெற்று கொண்டிருக்கும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைத்து கர்ப்பிணி பெண்கள் அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று உங்களுடைய உடல்நிலையினை பரிசோதனை மேற்கொள்வதோடு, தினமும் நமது பாரம்பரிய உணவு வகைகளான கீரைகள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை உட்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு பல்வேறு வகையான அரியவகை பழங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைகள் கிடைக்கிறது மருத்துவ குணம் வாய்ந்த இயற்கை உணவுகளை தினமும் உட்கொண்டு, தாயும், சேயும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பூ, வளையல், பழம் மற்றும் மங்களப் பொருட்கள் ஆகியவைகள் அடங்கிய சீர்வரிசையினை வழங்கியதோடு, ஆரோக்கிய குழந்தைகளுக்குள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடம் பிடித்த குழந்தையின் தாய்மார்களுக்கு பரிசுகளையும், ஆறுதல் பரிசும் வழங்கினார்கள். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கான சமையல் போட்டிகளில் முதல் மூன்று இடத்தை பெற்று வெற்றி பெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுகளையும், ஆறுதல் பரிசு ஒரு கர்ப்பிணிக்கும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொ) சரோஜினி, திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவர் ஷா.ஹாருன் றஷீது (நஸீர்), துணைத் தலைவர் அ.சுல்பத் அமீர், செயல் அலுவலர் வி.வினிதா, கோதநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் அனீஸ், தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, வார்டு உறுப்பினர்கள் ஜெயா, முஹம்மது ராபி செல்லத்துரை, தீப்தி, அய்யப்பன், பௌசியா, சுஜாதா, விக்னேஷ், மாவட்ட திட்ட உதவியாளர் (போஷன் அபியான்) ஹைமாவதி, அருளானந்த ஜார்ஜ், வீர வர்க்கீஸ், ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory