» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு: மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி!

செவ்வாய் 17, மே 2022 5:01:24 PM (IST)



குமரி மாவட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவை மனுக்கள் குழுத்தலைவர் கோவி.செழியன் தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன், மற்றும் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மற்றும் மனுக்கள் குழு உறுப்பினர்கள் இன்று (17.05.2022) பால்குளம் அரசு குடிசைமாற்று வாரியம் குடியிருப்பு, தேரூர் கிராமத்திலிருந்து புதுகிராமம் மற்றும் கோதைகிராமம் வழியாக செல்லும் தார்சாலை மேம்பாடு, சுசீந்திரம் மேலசங்கரன்குழி நரிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வாயிலாக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதோடு, தீர்வு காணப்படாத மனுக்கள் மீது உரிய இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை செயலர், சட்டப்பேரவை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இன்றைய தினம் 10 இடங்களுக்கும் மேலாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

மேலும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்ததோடு, ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் 3 இடங்களில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்தல், சாலைகளை சரிசெய்தல், தூர்வாருதல் மேற்கொள்ள வேண்டுமென்று என்னிடம் 3 கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். அதனடிப்படையில், நாளை (18.05.2022) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

பொதுமக்களிடமிருந்து சாலைவசதிகள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நீண்டநாள் நிறைவேற்றப்படாமல் இருந்த தூர்வாருதல் குறித்தும், குடிநீர் பிரச்சனை தீர்க்க வேண்டுமென்று சட்டப்பேரவை குழுக்களுக்கு சுமார் 238 மேலாக மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 120 மனுக்களுக்கு உரிய அதிகாரிகள் வாயிலாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது நாளை தினம் ஏன் தீர்வு செய்யப்படவில்லை, இடர்பாடுகள் ஏதேனும் இருப்பதா என்பது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இன்று ஆய்வு மேற்கொள்ளும்போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சட்டப்பேரவை குழுக்கள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தற்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முடிவிற்குள் உரிய துறைகளின் வாயிலாக நிரந்தரமாக சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, தெங்கம்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட குளத்துவிளை என்ற கிராமத்தில் குடிநீர் இணைப்பு கோருதல், உடையப்பன்குடியிருப்பில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை மாற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோருதல், பணிக்கன்குடியிருப்பு பகுதியில் சாலையை சீரமைக்க கோருதல், 

இராஜாக்கமங்கலம் புதுக்குடியிருப்பு பகுதிக்குட்பட்ட செம்பட்டை ஓடையில் பாலம் கட்ட கோருதல், இராஜாக்கமங்கலம்துறை கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோருதல், மேலச்சங்கரன்குழி ஊராட்சி நரிக்குளம் கரை மற்றும் குளத்தினை சீரமைக்க கோருதல், இராஜாக்கமங்கலம் மதகு ஊச்சிகால்வாய்கலை விரிவுப்படுத்தி இருபக்கமும் பக்கச்சுவர் கட்டி விவசாய நிலங்கள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளுதல், மணவாளக்குறிச்சி பெரியகுளத்திற்கு பக்கச்சுவர் கட்டித்தர கேட்டல் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மனுதாரரிடம் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத்தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் தெரிவித்தார்.

நடைபெற்ற ஆய்வில், குழு உறுப்பினர்கள் மு.பெ.கிரி, S.சந்திரன், எ.எம்.வி. பிரபாகரராஜா கே.பி.சங்கர், சா.மாங்குடி, T.K.அமுல் கந்தசாமி, ஆ.கோவிந்தசாமி, கோ.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ந.தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநராட்சி ஆணையர் ஆஷா அஜித், நாகர்கோவில் மாநகர துணை மேயர் மேரி பிரின்சி லதா, சட்டப்பேரவை இணை செயலாளர் இரா.சாந்தி, வேளாண் விற்பனை மற்றும் உற்பத்தி குழுத்தலைவர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அழகேசன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அரசு வழக்கறிஞர் மதியழகன் உட்பட பலர் உள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory