» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வுக் கலைப்பயணம்: ஆட்சியர் மா.அரவிந்த், துவக்கி வைத்தார்

புதன் 20, அக்டோபர் 2021 5:28:42 PM (IST)குமரி மாவட்டத்தில் ”இல்லம் தேடிக் கல்வி ” விழிப்புணர்வுக் கலைப்பயணத்தினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், கற்பதைக் கற்கண்டாக்க "இல்லம் தேடிக் கல்வி " விழிப்புணர்வுக் கலைப் பயணத்தினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, தெரிவிக்கையில்: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளிகளைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ” இல்லம் தேடிக் கல்வி ” என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் வகையில், மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் பள்ளிகள் என 4 நிலைகளில் செயல்பாட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல். பள்ளி நேரத்தைத் தவிர, மாணவர்கள் வசிப்பிடம் அருகே, சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல். மாணவர்கள் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை ”இல்லம் தேடிக் கல்வி” திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்தும் விதமாக, நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால், 

இக்கல்வியாண்டில் 6 மாத காலத்திற்கு, தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1 ½ மணி நேரம் (தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்கச் செய்யத் திட்டமிடப்பட்டு, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் 2 வார காலத்திற்கு முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, அதன் வாயிலாகக் கிடைக்கப் பெறும் சிறந்த கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் "இல்லம் தேடி கல்வி” திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல குமரி கலைக்குழுவினர் உதவியுடன் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரமாக நடத்தப்படவுள்ளன. இதில் கிராம அளவில் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள்பேரணி, வீதிநாடகம், பறை இசை, தோல்பாவை கூத்து, கதை சொல்லுதல் வாயிலாக, 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு திறன்மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறுவதற்காக, கற்பதைக் கற்கண்டாக்க "இல்லம் தேடிக் கல்வி" விழிப்புணர்வுக் கலைப்பயணம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கவுள்ள தன்னார்வலர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைப் போலவே 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ள இச்சிறப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர் மற்றும் ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாக கொண்டு சேர்க்கும் வகையிலும், இத்திட்டத்தின் ஒட்டு மொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும், இத்திட்டத்திற்கான சின்னம் (Logo with Tag Line) மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சின்னம் (Logo with Tag Line) உருவாக்கும் போட்டி 24.10.2021-க்குள் நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து நகர் / ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி / கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை.

போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் சின்னம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொதுமக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூ.25,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியாளர்கள் தங்களின் இறுதிப்படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியாளர்களால் வழங்கப்படும் சின்னத்தை இறுதி செய்யும் பொறுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையை சார்ந்ததாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள், சமக்ர சிக்க்ஷா உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், நேர்முக உதவியாளர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக்கல்வி பாதுகாப்பு சங்கம், ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர், நகராட்சி ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory