» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சொத்துவரி உயர்வு: கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் - கீதாஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு

செவ்வாய் 11, ஜூன் 2019 3:24:17 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைத்திட வலியுறுத்தி திமுக சார்பில் வருகிற 14ஆம் தேதி கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கை:  அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டால் மாநகராட்சி பகுதிகளில் எந்தவித அத்தியாவசிய பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக குடிநீர் வழங்குவதை முறைப்படுத்துதல், சாக்கடை கால்வாய் தூர்வாராமல் இருப்பது, தெருவிளக்கு சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை.

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அரசு அலுவலர்கள் மூலம்  தூத்துக்குடி பழைய நகராட்சி பகுதி மற்றும் மாநகராட்சியோடு இணைந்த ஊராட்சி பகுதிகளுக்கான சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பைவரி என பல மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.  ஏற்கனவே பழைய வரித்தொகையை அதுவும் 2017 – 2018  ஆண்டிற்கு வரியை கட்டியவர்களும் கூடுதலாக புதிய வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.  பலமடங்கு வரி உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி, குடிநீர்கட்டணம், குப்பை வரியை உடனடியாக குறைத்திட வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற வருகிற 14ஆம் தேதி  வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வி.வி.டி.ரோடு டூவிபுரம் 5வது தெரு சந்திப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. பாராளுமன்ற குழு துணை தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி  தலைமை தாங்குகிறார். எனவே மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூh, மற்றும் ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடையச் செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

தூத்துகுடியன்Jun 12, 2019 - 11:43:15 AM | Posted IP 162.1*****

இந்த போராட்டம் நடத்தி அதன் மூலம் சொத்துவரி குறைக்கப்பட்டால் தங்களின் செல்வாக்கு மேலும் உயரும் . இப்போழுது தூத்துக்குடி நகரில் இது பெரிய பிரச்சனையாக உள்ளது .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory