» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க பத்திரிகையாளர் கொலை: சவுதி இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

புதன் 7, டிசம்பர் 2022 10:36:23 AM (IST)



பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

59 வயதான ஜமால் கசோகி சவுதி அரேபிய அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். துருக்கி பெண்ணான ஹதீஜா ஜென்கிஸை காதலித்தார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவு ஆவணங்களைப் பெற 2018-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை.

இதைத்தொடர்ந்து துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கசோகி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது.

ஹதீஜா ஜென்கிஸ் மற்றும் கசோகியால் நிறுவப்பட்ட உரிமைக் குழு இந்த வழக்கைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் இளவரசரின் இரண்டு உதவியாளர்களும் குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்நிலையில் சமீபத்தில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், தனது மகன் இளவரசர் முகமதுவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து அமெரிக்க அரசு, பிற நாடுகளின் நீதிமன்றங்களில் இருந்து அரசாங்கத் தலைவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான நீண்டகால சட்ட முன்மாதிரியை குறிப்பிட்டு முகமது பின் சல்மான் சமீபத்தில் பிரதமராக பதவியேற்றிருந்தாலும் அவருக்கு இறையாண்மை விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியது.

இது முகமது பின் சல்மானை பாதுகாக்கும் சூழ்ச்சி என்று கஷோகியின் வருங்கால மனைவி மற்றும் அவரது உரிமைகள் குழு வாதிட்டது. இருப்பினும் அரசு அவருக்கு விலக்கு அளிக்க தகுதி இருப்பதாக கண்டறிந்ததால் அவருக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த நீதிபதி இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்தார். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது உதவியாளர்கள் மீது அமெரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

முகமது பின் சல்மானுக்கு எதிரான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது எதிர்காலத்தில் அவரும், உலகெங்கிலும் உள்ள மற்ற சர்வாதிகார ஆட்சியாளர்களும் அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட வழிவகுக்கும் என்று கசோகியின் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory