» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய தொழில் அதிபர்களுக்கு அழைப்பு

செவ்வாய் 24, மே 2022 12:21:35 PM (IST)



ஜப்பான் சென்ற பிரதமர் மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ஜப்பான் தொழில் அதிபர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் இந்த 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஜப்பான் பயணம் மேற்கொண்டு உள்ளார். தனி விமானத்தில் நேற்று முன்தினம் மாலையில் சென்ற அவருக்கு தலைநகர் டோக்கியோவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டோக்கியோவில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்துகொண்டார்.

இதில் முக்கியமாக இந்தோ-பசிபிக் பிராந்திய வளத்துக்கான பொருளாதார கட்டமைப்பு (ஐ.பி.இ.எப்.) தொடக்க நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். இந்த அமைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேஷியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 13 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஜோ பைடன் தொடங்கி வைத்த ஐ.பி.இ.எப். நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமரும் கலந்து கொண்டார். 

அதேநேரம் பிற உறுப்பு நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் இணைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, 'ஐ.பி. இ.எப் உருவாக்கம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் எந்திரமாக மாற்றுவதற்கான ஒரு கூட்டு விருப்பத்தின் பிரகடனமாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான பொதுவான மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக ஜப்பானின் 30-க்கும் மேற்பட்ட பிரபல தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களை எடுத்துக்கூறிய அவர், இந்தியாவில் வர்த்தகம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதில் முக்கியமாக புகழ்பெற்ற எலக்ட்ரானிக் நிறுவனமான என்.இ.சி. கார்பரேஷனின் தலைவர் நோபுகிரோ எண்டோவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பாக சென்னை-அந்தமான் மற்றும் கொச்சி-லட்சத்தீவு இடையேயான பைபர் கேபிள் திட்டங்களில் என்.இ.சி. நிறுவனத்தின் பங்களிப்பை பாராட்டினார்.இதைத்தொடர்ந்து சுசுகி மோட்டார் கார்பரேஷன் நிறுவனத்தின் ஆலோசகர் ஒசாமு சுசுகி, தலைவர் டோஷிகிரோ சுசுகி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்த சந்திப்புகளுக்குப்பின் டோக்கியோவில் வாழும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அவர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவும், ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் என தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: ஜப்பானுடனான இந்தியாவின் உறவு ஆன்மிகம், ஒத்துழைப்பு மற்றும் உறவு சார்ந்தது. இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்காற்றி இருக்கிறது.

பிரச்சினை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதற்கு எப்போதும் இந்தியா தீர்வு கண்டிருக்கிறது. கொரோனா பேரிடரின்போது ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்தது. ஆனால் அந்த சூழலிலும் இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகளை நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாடுகளுக்கு இந்தியா வழங்கியது.

நான் எப்போது ஜப்பான் வந்தாலும், உங்களின் பாசத்தை அனுபவிக்கிறேன். உங்களில் பலர் பல ஆண்டுகளாக ஜப்பானில் குடியேறி இங்குள்ள கலாசாரத்தை ஒருங்கிணைத்திருக்கிறீர்கள். இருப்பினும், இந்திய கலாசாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பும் உங்களிடையே எப்போதும் வளர்ந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory