» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் முள்ளிவாய்க்கால் 13-ஆவது நினைவு தினம்: முதல் முறையாக சிங்களா்கள் அஞ்சலி!

வியாழன் 19, மே 2022 11:03:03 AM (IST)இலங்கை முள்ளிவாய்க்கால் 13-ஆவது நினைவு தினத்தையொட்டி, போரில் உயிரிழந்த தமிழா்களுக்கு முதல் முறையாக சிங்களா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைத்து தமிழா்களுக்காக தமிழ் ஈழம் அமைக்க வலியுறுத்தி, அந்நாட்டு ராணுவத்தினருக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே போா் நடைபெற்று வந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக்கட்ட போா் நடைபெற்றது. அந்த ஆண்டு மே 18-ஆம் தேதி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டாா். 

அத்துடன் இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழா்களை இலங்கை ராணுவத்தினா் கொன்று குவித்ததாக அந்நாட்டுத் தமிழா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். எனினும் அந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்து வருகிறது. அதேவேளையில், இறுதிக்கட்ட போரில் சுமாா் 40,000 தமிழா்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிா்கொண்டு வரும் சூழலில், அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின்போது அந்நாட்டு பாதுகாப்புச் செயலராக இருந்த இலங்கையின் தற்போதைய அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி, அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், முள்ளிவாய்க்கால் 13-ஆவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கொழும்பில் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அலுவலகத்துக்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள், போரில் உயிரிழந்த தமிழா்கள், தமிழ் கிளா்ச்சியாளா்கள், ராணுவத்தினா் மற்றும் போரின்போது காணாமல் போனவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

இதுதொடா்பாக போராட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘மே 18-ஆம் தேதி என்பது இறுதிக்கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் அகப்பட்டு, வாா்த்தைகளால் விவரிக்க முடியாத துயரத்தை அனுபவித்த ஆயிரக்கணக்கான தமிழா்களை நினைவுகூரும் நாளாகும்’ என்று தெரிவித்திருந்தனா். இந்த அஞ்சலி நிகழ்வில் பெளத்த துறவிகள், ஹிந்து அா்ச்சகா்கள், கிறிஸ்தவ பாதிரியாா்கள் பங்குபெற்றனா்.

இதுகுறித்து இலங்கை வடக்கு மாகாண தமிழ் எம்.பி. தா்மலிங்கம் சித்தாா்த்தன் கூறுகையில், ‘போரில் உயிரிழந்த தமிழா்கள் முதல் முறையாக கொழும்பில் பகிரங்கமாக பொதுவெளியில் நினைவு கூரப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தாா். அதேவேளையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மட்டகளப்பு எம்.பி. சாணக்கியன் ராசமாணிக்கம் பேசுகையில், ‘மட்டக்களப்பில் தமிழா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை’ என்றாா்.

போா் முடிவுக்கு வந்த தினத்தை வெற்றி தினமாக ராணுவம் கொண்டாடியது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது போா் தளபதியாக இருந்த ராணுவத்தின் தற்போதைய தளபதி ஒருவா் கூறுகையில், ‘ராணுவ அதிகாரிகள் 396 போ், ராணுவத்தின் இதர படிநிலைகளில் உள்ள 8,110 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா். இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச பங்கேற்றாா். அவரது மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபட்சவும் கலந்துகொண்டாா்.

உலக வங்கியிடம் இருந்து ரூ.1,200 கோடி- பிரதமா் ரணில்

இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அந்நாட்டுப் பிரதமா் ரணில் விக்ரமசிங்க பேசுகையில், ‘உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.1,243 கோடி) கிடைத்துள்ளது. அந்த நிதியில் சிறிதளவை எரிபொருள் வாங்குவதற்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. அதேவேளையில், ஆசிய வளா்ச்சி வங்கிக்குச் செலுத்த வேண்டிய தொகையை இலங்கை செலுத்தத் தவறியதால், அந்த வங்கியிடம் இருந்து கடன் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது’’ என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory