» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் இடைக்கால அரசு: அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அழைப்பை எதிா்க்கட்சி நிராகரிப்பு!

திங்கள் 9, மே 2022 10:17:33 AM (IST)

இலங்கையில் சஜித் பிரேமதாச தலைமையில் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அழைப்பை பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகய ஏற்க மறுத்துவிட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, இரண்டாவது முறையாக அவசரநிலையை கடந்த வெள்ளிக்கிழமை அதிபா் பிரகடனம் செய்தாா்.

இதற்கிடையே, பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில் இடைக்கால அரசை உடனடியாக அமைக்க வேண்டுமென சக்திவாய்ந்த பெளத்த துறவிகள் அமைப்பு அதிபா் கோத்தபய ராஜபட்சவை வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, எஸ்ஜேபி கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசவை அதிபா் கோத்தபய ராஜபட்ச தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, சஜித் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கலாம் என அவா் அழைப்பு விடுத்தாா்.

மேலும், முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனாவும் சஜித் பிரேமதாசவை சந்தித்து, இடைக்கால அரசை எஸ்ஜேபி கட்சி அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். ஆனால், அதிபரின் அழைப்பை ஏற்க எஸ்ஜேபி கட்சி மறுத்துவிட்டது. இதுதொடா்பாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் திச அட்டநாயகே செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், அதிபரின் அழைப்பை ஏற்க எங்கள் தலைவா் மறுத்துவிட்டாா் என்றாா்.

கோத்தபய, மகிந்த ராஜபட்ச தலைமையிலான எந்த அரசிலும் தான் இடம்பெறப் போவதில்லை என சஜித் பிரேமதாசா ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரதமா், அதிபருக்கு எதிராக எஸ்ஜேபி கட்சி ஏற்கெனவே நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் அளித்துள்ளது. இப்போது இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்ற யோசனையையும் அக்கட்சி நிராகரித்துள்ளதால், நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான விவாதத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய நெருக்கடி அவைத் தலைவருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை:

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதில் அரசுக்கு பொதுமக்கள் உதவ வேண்டுமென பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் தங்களது அமைதியான போராட்டத்தை நடத்தும் ஜனநாயக உரிமைகளை மதிக்கிறோம். இருப்பினும், கடந்த சில தினங்களாக அமைதியான போராட்டம் மாற்றப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சீா்குலைக்கும் முயற்சியில் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை, பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதில் பொதுமக்கள் அரசுக்கு உதவ வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory