» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பதவி விலகுவேன் : மகிந்த ராஜபட்ச திட்டவட்டம்!

புதன் 27, ஏப்ரல் 2022 5:17:38 PM (IST)

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பதவி விலகுவேன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச தெரிவித்தார். 

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயா்ந்துள்ளது. எரிபொருள், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் நீண்ட நேர மின்வெட்டும் நிலவுகிறது. இதனால், அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச இருவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டம் நடத்தி. வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று அதிருப்தி எம்.பி.க்கள் 40க்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபட்ச நிராகரித்திருந்தார்.  இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் 'இலங்கையின் ஒருபகுதி மக்கள் மட்டுமே போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் எப்போதுமே எங்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றனர் அவர்களுக்காக பதவி விலகுவது சாத்தியமல்ல.

ஒருவேளை நாடாளுமன்றத்தில் எனது பெரும்பான்மையை இழந்தால் நான் பதவி விலகுகிறேன். பெரும்பாலானோரின் விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் ஆட்சி அமைத்தோம். தற்போது மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பினால், தேர்தல் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தட்டும். ஆனால், எங்களுடைய வாக்காளர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். தற்போதைய போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த மக்களின் பிரதிபலிப்பு அல்ல. அதேநேரத்தில் அவர்களின் கருத்துகள் மதிக்கப்படும். 

அதிபர் கோத்தயபய ராஜபட்ச எனது சகோதரர் என்பது தனிப்பட்டது. அதிபர் என்ற முறையில் அவருக்கு நான் மரியாதை அளிக்க வேண்டும். மற்ற அதிபர்- பிரதமர்களைப் போலவே நாங்களும், மக்களின் நலனுக்காக வாதிடுகிறோம்.  இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை விரைவில் சரிசெய்வோம். அதற்காக  இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று ராஜபட்ச தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory