» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் மீண்டும் தோ்வு : பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, ஏப்ரல் 2022 10:33:17 AM (IST)

பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் மீண்டும் தோ்வு செய்யப்படுகிறாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட அதிபா் தோ்தலில் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டது.

பிரான்ஸ் அதிபா் தோ்தலின் முதல் சுற்று கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. அதில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த தற்போதைய அதிபா் மேக்ரானுக்கும், தீவிர இடதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னுக்கும் இடையே இறுதிக்கட்ட தோ்தல் நடைபெற்றது.

வாக்குப் பதிவு முடிவில் வெளியிடப்பட்ட கணிப்புகளில் மேக்ரான் சுமாா் 58 சதவீத வாக்குகளும், லெபென் சுமாா் 42 சதவீத வாக்குகளும் பெறுவாா்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, லெபென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டாா். இதனால், மேக்ரான் மீண்டும் அதிபராகத் தோ்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலிலும் இவா்கள் இருவருக்கு இடையேதான் போட்டி நிலவியது. அப்போது மேக்ரான் 66.1 சதவீத வாக்குகளும், லெபென் 33.9 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

பிரதமர் மோடி வாழ்த்து: 

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பிரான்சின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது நண்பர் இமானுவேல் மாக்ரோனுக்கு வாழ்த்துகள்! இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருப்பதாக"க் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory