» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2025-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு: நாசா அறிவிப்பு

புதன் 10, நவம்பர் 2021 5:02:14 PM (IST)



சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. அப்போல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் முதன்முதலில் காலடி வைத்து பெருமை சேர்த்தனர். அதன் பிறகு அமெரிக்கா நாசா விண்வெளி மையம் பல தடவை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். 2024-ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறினார். இதற்காக தனியார் விண்வெளி ஆய்வு மையமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்குவதாக ஒப்பந்ததில் முடிவு செய்தனர்.

விண்வெளி வீரர்கள் பயணம் செய்வதற்காக ஆர்டிமிஸ் லூனர்-3 என்ற விண்வெளி ஓடத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் இதன் பணிகள் தாமதமாகி உள்ளன. எனவே இது சம்பந்தமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகியும் முன்னாள் விண்வெளி வீரருமான பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

பில் நெல்சன் கூறியதாவது:-  2024ம் ஆண்டு ஒரு விண்வெளி கூடாரத்தை நிலவின் சுற்றுவட்டப் பாதையில் அமைத்திட நாசா திட்டமிட்டிருந்தத்து. அதனை தொடர்ந்து 2028ம் ஆண்டு விண்வெளி வீரர்களை நிலவில் நீண்ட நாட்களுக்கு தங்கச்செய்யலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது.   ஆனால், முன்னாள் ஜனாதிபதி  டிரம்பின் அறிவிப்பால் அந்த திட்டம் 2024ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் விண்கலம் தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருந்தது. 2024ம் ஆண்டு மே மாதம் எஸ்.எல்.எஸ் ஓரியன் விண்கலம் மூலம் நிலவுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை, நாசா ஒதுக்கி உள்ளதை எதிர்த்து அதன் போட்டியாளரான ஜெப் பெஸோஸின் புளூ ஒரிஜின் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை கடந்த வியாழக்கிழமை அன்று கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் காரணமாக ஆர்டிமிஸ் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது அந்த திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கரோனா பெருந்தொற்றின் காரணமாகவும் இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மேலும், டிரம்பின் ஆட்சிக்காலத்தில் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதும் காரணம். ரோபோக்களை நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பும் சீனாவின்  திட்டம், மேற்கண்ட ஆர்டிமிஸ் திட்டத்துக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. ரஷியா மற்றும் சீனாவுடன் விண்வெளி பந்தயத்தில் அமெரிக்கா பங்கேற்றுள்ளது. 

2020ம் ஆண்டுக்கு பின் 3 விண்வெளி வீரர்கள் சேர்ந்த குழுக்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி உள்ளது நாசா.வரும் வாரங்களில் இன்னொரு விண்வெளி வீரர் குழுவை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. மனிதர்களை நிலவில் குடிகொள்ள செய்வதற்கான முன்னேற்பாடாக இந்த ஆர்டிமிஸ் திட்டம் செயல்பட உள்ளது. மேலும், செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் மாபெரும் திட்டத்துக்கு முன்னோடியாக இந்த திட்டம் அமையும்.

ஆர்டிமிஸ் திட்டத்தில் பெண் ஒருவரையும் சேர்த்து நிலவுக்கு அனுப்ப முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இறங்கும் ஆர்டிமிஸ் விண்கலத்தை தயாரிக்கும் பணியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள தாமதம் காரணமாக தேதி குறிப்பிடாமல் 2025ம் ஆண்டுக்கு இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory