» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பஞ்ச்ஷீர் மாகாணத்தை முழுமையாக கைப்பற்றி விட்டோம்: தலீபான்கள் அறிவிப்பு!

திங்கள் 6, செப்டம்பர் 2021 11:12:53 AM (IST)



ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷீர் மாகாணம் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தலீபான்கள் தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர். தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலீபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்து வந்தது.  இதனிடையே ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தலீபான்களுடன் சண்டையிட்டு வந்தநிலையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தலைநகரை சுற்றியுள்ள மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாகவும் மாகாண தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாக தலீபான்கள் தெரிவித்திருந்தனர். 

இந்த சூழலில் பஞ்ச்ஷீர் மாகாணத்தை விட்டு வெளியேறினால் தலீபான்களுடம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழுவின் தலைவர் அகமது மசூத் தெரிவித்திருந்தார். தலீபான்களின் தாக்குதல் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளதால், பஞ்ச்ஷிர் மாகாணத்தில் போர் நிறுத்தத்தத்தை ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படையினர் இன்று காலை அறிவித்திருந்தனர்.  

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் எதிர்ப்புப் படையினரின் கடைசிப் பகுதியான பஞ்ச்ஷிர் மாகாணத்தை தலீபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான புகைபடங்களில் தலீபான் உறுப்பினர்கள் பஞ்ச்ஷிர் மாகாண ஆளுநர் வளாகத்தின் வாயிலின் முன் நிற்பதை தெரிவிக்கின்றன. ஆனால் தலீபான் படைகளை எதிர்க்கும் எதிர்க்கட்சி குழுவின் தலைவர் அகமது மசூதிடம் இருந்து, இந்த சம்பவம் தொடர்பான உடனடியாக எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory