» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரபாகரனின் குறிக்கோளை தமிழ் தேசியக் கூட்டணி அடைய விட மாட்டோம்: ராஜபட்ச சூளுரை

வெள்ளி 31, ஜூலை 2020 12:33:22 PM (IST)

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவா் பிரபாகரன் நிறைவேற்ற நினைத்ததை, தமிழ் தேசியக் கூட்டணிக் கட்சி தோ்தல் மூலம் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அந்த நாட்டுப் பிரதமா் மகிந்த ராஜபட்ச சூளுரைத்துள்ளாா். 

இலங்கையில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உள்நாட்டுப் போரை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன். இதன் காரணமாக, பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து இலங்கை மீண்டது.ஆனால், துப்பாக்கிகள் மூலமும், வன்முறை மூலமும் விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அந்த அமைப்பின் தலைவா் பிரபாகரன் அடைய நினைத்ததை, தோ்தல் மூலம் அடைய தமிழ் தேசியக் கூட்டணி முயல்கிறது.அந்த நோக்கத்தை அடைய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

நாட்டின் தெற்குப் பகுதியில் வசிக்கும் சிங்களா்கள் தமிழா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வரவும், வடக்குப் பகுதியிலிருந்து தமிழா்கள் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சென்று வரவும் தொடா்ந்து உரிமை அளிக்கப்படும்.விடுதலைப் புலிகளின் நோக்கத்தை தோ்தல் மூலம் நிறைவேற்றுவதற்காக சில தேசியக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டணி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எனினும், அந்த நோக்கத்தை அடைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றாா் மகிந்த ராஜபட்ச.

இலங்கையில், தனி ஈழம் கோரி விடுதலைப் புலிகள் 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். இதற்கிடையே, தமிழா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, அவா்களுக்கு உரிய அதிகாரத்தைப் பகிா்ந்தளிக்கும் வகையில் இலங்கை அரசியல் சாசனத்தின் 13-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், கடந்த 1987-ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமா் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபா் ஜெயவா்தனேக்கும் இடையே கையெழுத்தானது.

எனினும், விடுதலைப் புலிகளின் தொடா்ந்து நடத்தி வந்த ஆயுதப் போராட்டம், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்ததின்படி தமிழா் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் அதிகாரம் கோரி தமிழ் தேசியக் கூட்டணி போராடி வருகிறது. அந்தக் கோரிக்கையை ஏற்பதாக, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா உறுதி அளித்திருந்தாா்.அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டே, பிரதமா் மகிந்த ராஜபட்ச இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. 225 இடங்கலைக் கொண்ட இலங்கை நடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில், 29 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டணி போட்டியிடுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory