» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பொதுவெளியில் தோன்றிய வடகொரியா தலைவர் கிம்: 20 நாளாக நீடித்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி

ஞாயிறு 3, மே 2020 10:16:27 AM (IST)20 நாளாக நீடித்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பொதுவெளியில் தோன்றினார்.

கடந்த 2011-ம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் பொறுப்பேற்றார். அதன்பிறகு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து சர்வதேச நாடுகளை அதிரவைத்தார். இதன் மூலம் அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதிக்கு பின் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

வடகொரியாவின் தந்தையும், கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. வடகொரியாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த விழாவிலும் கிம் ஜாங் அன் கலந்துகொள்ளவில்லை. கிம், வடகொரியா தலைவராக பொறுப்பேற்றதற்கு பின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை தவிர்த்ததால், அவரது உடல் நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன. இதற்கிடையில், சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர், உடல் நிலை கவலைக் கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

அதனை தொடர்ந்து, அறுவை சிகிச்சைக்கு பின் கிம் இறந்து விட்டதாகவும், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் பல்வேறு செய்திகள் வலம் வர தொடங்கின. அதுமட்டும் இன்றி கிம்மின் உடல்நிலையை சோதிக்க சீன மருத்துவக் குழு, வட கொரியா விரைந்துள்ளது, கிம்மின் சொந்த ரயில் ரிசார்ட், அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், கிம்மின் தங்கைதான் அந்த நாட்டின் அடுத்த தலைவர் என்பது போன்ற உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தன.ஆனால் தென்கொரியாவும், அமெரிக்காவும் கிம் உயிருடன் நலமாக இருப்பதாக கூறியது.

வட கொரியாவைப் பொறுத்தவரை தலைவரை பற்றி ஏதேனும் வதந்திகள் பரவினால் அதற்கு அந்நாட்டு அரசு ஊடகம் மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்கும். ஆனால் கிம்மின் உடல்நிலை தொடர்பாக வட கொரிய ஊடகங்கள் கடந்த 20 நாள்களாக வாய்திறக்கவில்லை. இது கிம் உடல்நிலை மீதான சந்தேகத்தை இன்னும் வலுவாக்கியது. இந்த நிலையில் அனைத்து மர்மங்களுக்கும் வட கொரிய அரசு ஊடகமே முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டது. வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 20 நாள்களுக்கு பின் முதல் முறையாக தலைவர் கிம் ஜாங் அன் பொதுவெளியில் தோன்றியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

தலைநகர் பியாங்யாங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள உர தொழிற்சாலையை கிம் நேற்று முன்தினம் திறந்து வைத்ததாகவும், இந்த நிகழ்ச்சியில் வடகொரிய அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் கிம்மின் தங்கை கிம் யோ ஜாங் போன்ற பலரும் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிம், ரிப்பன் வெட்டி தொழிற்சாலை திறந்து வைப்பது மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து தொழிற்சாலையை ஆய்வு செய்வது போன்ற புகைப்படங்களையும் கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் அன்னை காண பல ஆயிரக்கணக்கான மக்கள் தொழிற்சாலை பகுதியில் திரண்டதாகவும், அவர்கள் கிம்மை பார்த்த பரவசத்தில் மகிழ்ச்சி கோஷம் எழுப்பியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory