» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் கரோனா காரணமாக நகரங்களை முடக்க முடியாது: இம்ரான் கான்

வியாழன் 19, மார்ச் 2020 8:51:28 AM (IST)

கரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாகிஸ்தானில் செயல்படுத்த முடியாது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.  

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் போராடி வருகிறது. இதுவரை அங்கு 237 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்பட்சமாக சிந்து மாகாணத்தில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானை சுற்றியுள்ள கண்காணிக்கப்படாத எல்லைகள், மருத்துவ வசதிகளில் உள்ள பற்றாக்குறை, மக்கள் மத்தியில் இருக்கும் கைகுலுக்கி கட்டிப்பிடிக்கும் பழக்கம், நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான படிப்பறிவில்லாத மக்கள் போன்ற பிரச்சனைகளால் பாகிஸ்தானில் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பாகிஸ்தானிடம் போதிய நிதிவசதி இல்லை. எனவே கரோனா வைரஸை எதிர்கொள்ள உலக வங்கியிடம் 20 கோடி டாலர் கடன் கேட்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. உலக வங்கியிடம் இருந்து 14 கோடி டாலர் கடனுதவி கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் அந்த தொகையை 20 கோடி டாலராக உயர்த்த பாகிஸ்தான் அரசு விரும்புகிறது. இது தொடர்பாக உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாகிஸ்தானில் செயல்படுத்த முடியாது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் நேற்று தொலைக்காட்சி மூலம் இம்ரான் கான் பேசுகையில் : பல வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வணிக வளாகங்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. 

இதுபோன்ற நடவடிக்கைகளை தற்போது பாகிஸ்தானில் செயல்படுத்த முடியாது. ஏனென்றால் பாகிஸ்தானின் நிலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல் இல்லை. பாகிஸ்தானில் உள்ள மக்கள் தொகையில் 25 சதவீதத்தினர் வறுமையில் வசிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கரோனா காரணமாக நாங்கள் நகரங்களை முடக்க முடியாது. மக்கள் எந்த கஷ்டத்தையும் சமாளிக்க தயார். ஆனால் பாகிஸ்தானில் முக்கிய நிறுவனங்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியவை மூடப்பட்டால் ஒருபக்கம் கரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். ஆனால் மறுபுறம் மக்கள் பட்டினியால் சாவார்கள்.

இருப்பினும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பாகிஸ்தான் பொருளாதாரம் சிறிது வளர்ச்சி அடைந்தது. ஆனால் தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மீண்டும் கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க நாங்கள் பன்னாட்டு செலவாணி நிதியத்திடமும் பணம் கேட்டுள்ளோம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக சேமித்து வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory