» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கியது: விமானப்படை வீரர் பலி

வியாழன் 12, மார்ச் 2020 8:31:45 AM (IST)

பாகிஸ்தானில் குடியரசு தினவிழாவுக்கான ஒத்திகையின்போது எப்-16 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் பலியானார்.

இந்தியா, ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டமான 1940-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி பஞ்சாப்பின் (தற்போதைய பாகிஸ்தான் மாகாணம்) லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சி மாநாட்டில் இந்தியாவிடம் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நினைவு கூரும் விதமாக பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ந் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாளில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முப்படைகளின் அணிவகுப்பும், கலாசார நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடைபெறும்.

இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் பாகிஸ்தானில் குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், முப்படைகளும் குடியரசு தின அணிவகுப்பாக தீவிர ஒத்திகையில் இறங்கியுள்ளன.அந்த வகையில் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று சாகச ஒத்திகையில் ஈடுபட்டன. இதற்காக எப்-16 ரக போர் விமானம் ஒன்று விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தை விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் நவ்மான் அக்ரம் என்பவர் இயக்கினார். சாகர்பரியான் என்ற இடத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இதில் விமானத்தில் இருந்த விங் கமாண்டர் நவ்மான் அக்ரம் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்றும், இதுபற்றி தீவிரமாக விசாரிப்பதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த எப்-16 ரக போர் விமானங்களை பயங்கரவாதிகளை அழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு விற்பனை செய்தது.

ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்தபோது பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்கள் இந்த வான்வெளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தின. அதனை தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைசன் ரக போர் விமானத்தின் மூலம் விரட்டி சென்று, சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory