» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் முதன்முதலாக பரவிய வூஹான் நகரில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆய்வு!

செவ்வாய் 10, மார்ச் 2020 5:13:09 PM (IST)கரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக துவங்கிய சீனாவின் வூஹான் நகருக்கு சென்ற அதிபர் ஜீ ஜின்பிங் அங்கு நிலைமையை ஆய்வு செய்தார்.

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,136 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று வூஹான் நகருக்கு வருகை தந்தார். கரோனா பரவ துவங்கிய பின் வூஹான் நகருக்கு அதிபர் ஜீ ஜின்பிங் வருவது இதுவே முதல்முறை. வூஹான் நகருக்கு வந்த அதிபர் ஜீ ஜின்பிங் அங்கு நிலைமையை ஆய்வு செய்தார். நோய் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் கரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், சமூக தொண்டர்கள் என அனைவருக்கும் தன் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார். சீன பிரதமர் லீ கெக்கியாங் கடந்த ஜனவரி 26ம் தேதி வூஹான் நகருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மக்களை தனிமைப்படுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஹோட்டல் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 20 பேர் பலியானார்கள். சீனாவின் பூஜியான் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிதாக மாகாணத்தில் நுழைபவர்களுக்கு கரோனா வைரஸ் உள்ளதா என கண்காணிக்க அவர்கள் அனைவரும் குவான்ஜூ நகரில் உள்ள ஜின்ஜியா ஹோட்டலில் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜின்ஜியா ஹோட்டல் கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ஹோட்டலில் இருந்த 71 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். கடந்த 3 நாட்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்றிரவு சுமார் 52 மணி நேர போராட்டத்திற்கு பின் 10 வயது சிறுவன் மற்றும் அவனது தாயார் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 61 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 10 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory