» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவுதி அரேபியா முன்னாள் பட்டத்து இளவரசர் உட்பட அரச குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

ஞாயிறு 8, மார்ச் 2020 7:49:51 PM (IST)சவுதி அரேபியாவில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்ததாக முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நாயஃப் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சவுதி அரேபியாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மெக்கா உள்ளிட்ட புனித தலங்களுக்கு மக்கள் அதிகளவில் சென்று தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் சவுதி அரசர் சல்மானுக்கு எதிராக ஆட்சியை கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியதாக அரச குடும்பத்தை சேர்ந்த 3 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மேலும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துலாஜிஸ் அல் சவுத் அரசரின் மருமகன் முகமது பின் நாயஃப் மற்றும் அவரது இளைய சகோதரர் நவாஃப் பின் நாயஃப் ஆகிய மூவரும் தேசவிரோத குற்றச்சாட்டின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அரசரின் மருகமனான முகமது பின் நாயஃப், முன்னாள் பட்டத்து இளவரசர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2015ம் ஆண்டு சவுதியின் பட்டத்து இளவரசராக இவர் அறிவிக்கப்பட்டார். பின்னர் 2017ம் ஆண்டு அவரிடம் இருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டு முகமது பின் சல்மானுக்கு வழங்கப்பட்டது.

அரசரின் பாதுகாவலர்கள் வெள்ளிக்கிழமை காலை இளவரசர்கள் அப்துலாஜிஸ் அல் மற்றும் முகமது பின் நாயஃப் இருவரையும் அவர்கள் வீட்டில் கைது செய்ததாக தி வால் ஸ்டீரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. முகமது பின் நாயஃபின் இளைய சகோதரரும் உடன் கைது செய்யப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் மூவரும் அரசர் மற்றும் பட்டத்து இளவரசருக்கு எதிராக செயல்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என சவுதி அரசவை வட்டாரங்கள் கூறுகின்றன.  

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து தன் அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதாக அவர் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவருக்கு எதிராக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி இரண்டு வருடங்கள் முன் துருக்கியில் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது முன்னாள் பட்டத்து இளவரசர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது இந்த குற்றச்சாட்டுகளை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory