» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை : அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா!!

திங்கள் 9, டிசம்பர் 2019 3:28:15 PM (IST)

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உலகின் இரு எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு மே மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். அப்போது வடகொரியாவை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே அணுஆயுத பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால் இருநாடுகளுக்கு இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை முடங்கி போனது. இந்த சூழலில் யாரும் எதிர்பாரத வகையில் டிரம்ப், கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு நேரில் சென்று கிம் ஜாங் அன்னை சந்தித்தார். அப்போது முடங்கிப்போன அணுஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டனர்.

இதற்கிடையில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை எச்சரிக்கும் வகையில் தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதித்தது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா கூறி வந்தது.

ஆனால் வடகொரியாவோ, அமெரிக்கா தனது விரோதப்போக்கை மாற்றிக்கொள்ளும் வரை அணுஆயுத பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என கூறியது. மேலும் குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை நீக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவர அமெரிக்காவுக்கு வடகொரியா காலக்கெடு நிர்ணயித்தது. அமெரிக்கா அப்படி செய்யாவிட்டால் வடகொரியா புதிய பாதையை கடைபிடிக்கும் என அந்த நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமெரிக்கா மவுனம் காத்து வந்தது. 

இந்நிலையில் அமெரிக்காவுடனான அணுஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வடகொரியா நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது. ஐ.நா.வுக்கான வடகொரியா தூதர் கிம் ஜோங் இதுபற்றி கூறுகையில், ‘‘நாங்கள் இப்போது அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை. ஏனெனில் வடகொரியா அணுஆயுதங்களை கைவிடவேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கனவே பேச்சுவார்த்தை அட்டவணையில் இருந்து வெளியேறிவிட்டது. எனவே அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை’’ என்றார்.

ஆனாலும் இந்த விவகாரம் பற்றி பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்கா-வடகொரியா இடையே ஒரு உடன்பாடு எட்டப்படும் என தான் இன்னும் நம்புவதாக கூறினார். அதேசமயம் வடகொரியா ஏதேனும் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நான் ஆச்சரியப்படுவேன் என்றும் வடகொரியா என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா மிக முக்கிய அணு ஆயுதத்தை சோதித்து அதிரவைத்தது.

வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள சோஹே செயற்கைகோள் ஏவுதளத்தில் இந்த மிக முக்கிய அணு ஆயுதம் சோதிக்கப்பட்டதாக அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு அறிவியல் அகாடமியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் சமீபத்திய சோதனையின் முடிவு வடகொரியாவின் போர்திறனுக்கான மாற்றத்தில் முக்கிய விளைவை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். எனினும் எந்த மாதிரியான ஆயுதம் சோதிக்கப்பட்டது என்பது பற்றி அவர் தெளிவுபடுத்தவில்லை.எனினும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அல்லது ஏவுகணை செலுத்தும் திறனை அதிகப்படுத்துவதற்கான ராக்கெட் என்ஜின் சோதிக்கப்பட்டிருக்கலாம் என சர்வதேச நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory