» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய பதவி ஏற்பு: பிரதமர் ரணில் பதவி விலக அமைச்சர்கள் நெருக்கடி

செவ்வாய் 19, நவம்பர் 2019 10:36:51 AM (IST)இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றார். பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கேவுக்கு அமைச்சர்கள் நெருக்கடி அளித்துள்ளனர்.

இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு இடையேதான் நேரடிப்போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையில், கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளும் (52.25 சதவீதம்), சஜித் பிரேமதாசாவுக்கு 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளும் (41.99 சதவீதம்) கிடைத்தன. இதர வேட்பாளர்கள் 5.76 சதவீத வாக்குகள் பெற்றனர்.

கோத்தபய ராஜபக்சே, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் கமிஷன் தலைவர் மகிந்த தேசப்ரியா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதையடுத்து, நாட்டின் 7-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே நேற்று பதவி ஏற்றார். வடமத்திய பகுதியில் உள்ள பழமையான நகரான அனுராதபுரத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோத்தபய ராஜபக்சேவின் அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, ஜெய ஸ்ரீ மகாபோதி என்ற புத்தர் கோவிலில் கோத்தபய ராஜபக்சே வழிபட்டார். மகாமேனா தோட்டத்தில் உள்ள புனிதமான அத்தி மரத்தை கும்பிட்டார். புனித ஸ்தூபியையும், உலகம் முழுவதும் புத்த சமயத்தினரால் புனிதமாக கருதப்படும் நினைவுச்சின்னத்தையும் அவர் வழிபட்டார். கோத்தபய ராஜபக்சே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் "வெற்றியை நோக்கிய பயணத்தை விட வெற்றியை தக்கவைத்துக் கொள்வது முக்கியமானது” என்று கூறியுள்ளார். தனக்கு எதிராக ஓட்டு அளித்தவர்களுக்கும் இனபாகுபாடு பார்க்காமல் பாடுபடப் போவதாகவும், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்ததால், அந்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுப்பதற்காக, மந்திரிசபை கூட்டத்தை கூட்டினார்.அதில், அவர் பதவி விலக வேண்டும் என்று ரவுப் ஹக்கீம், மங்கள சமரவீரா, படாலி சாம்பிக ரணவாகா, நவின் திஸ்சநாயகே உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தினர். அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு ஏற்ப புதிய அரசு அமைக்க அதிபருக்கு வழிவிடும்வகையில் ராஜினாமா செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகுதான் தேர்தல் நடைபெற வேண்டும். 

ஆனால், அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதால், நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி முன்கூட்டியே தேர்தல் நடத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதிபர் தேர்தல் வெற்றியால் உற்சாகம் அடைந்திருக்கும் ராஜபக்சே தரப்பு, தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் என்று தெரிகிறது.ஐக்கிய தேசிய கட்சி அரசு, பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றும், புதிய நாடாளுமன்றத்தை அமைக்க தேர்தலை நடத்துவதுதான் சரியானது என்றும் ராஜபக்சே கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுத்தால், பிப்ரவரி மாதவாக்கில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அதிகாரம் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory