» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிகிச்சைக்கு லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு நிபந்தனை: நவாஸ் ஷெரீப் ஏற்க மறுப்பு

புதன் 13, நவம்பர் 2019 12:04:40 PM (IST)

மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பனாமா ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக அவருக்காக ஜாமீன் வழங்கப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அதன்பின் அவரது உடல்நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நவாஸ் ஷெரீப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என மருத்துவர்கள் தெரிவித்தனர். நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல தடை இருப்பதால் அதற்கு அனுமதிகோரி அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் அரசிடம் விண்ணப்பித்தனர். அதை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு, அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது. ஆனால், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயரை நீக்காததால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல அந்நாட்டு அமைச்சரவை நிபந்தனையுடன் நேற்று ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறுகையில்,”சில நிபந்தனைளுடன் நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயரை நீக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மேலும்,”சிகிச்சை முடிந்து திரும்பி வருவதற்கான உத்தரவாதத்தை அளிக்கவேண்டும் 700 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரத்தை சமர்ப்பிக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானின் இந்த நிபந்தனையை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நவாஸ் ஷெரீப் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,”நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தடை நீக்கப்படுவதற்கு 700 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை சமர்ப்பிக்கமுடியாது. அதை நாங்கள் அரசிடம் தெரிவித்துவிட்டோம். அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனை சட்டவிரோதமானது என்று நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீப்பிற்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு முழு காரணமும், இம்ரான் கானும் அவரது அரசும்தான். அவரது நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அசிங்கமாக அரசியல் செய்துகொண்டிருக்கிறது” என்று கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory