» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈராக்கில் தேர்தல் தேவையில்லை, அரசியல் சீர்திருத்தம் தான் வேண்டும்: போராட்டக்காரர்கள் அறிவிப்பு

செவ்வாய் 12, நவம்பர் 2019 12:50:57 PM (IST)

ஈராக்கின் அரசு அமைப்பு முழுமையாக சீர்திருத்தப்பட வேண்டும். ஊழல்வாதிகள் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
ஈராக்கில் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் அந்நாட்டின் பொருளாதார நிலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. அதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் வேண்டி அக்டோபர் 1ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

தலைநகர் பாக்தாத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதன் மூலம் ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக்கில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஈராக்கின் முக்கிய கூட்டணி நாடான அமெரிக்கா விரைவில் ஈராக்கில் பொதுதேர்தல் நடத்தும்படி அந்நாட்டு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது.அதில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்களை நிறுத்தும்படி ஈராக் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் வாக்குறுதி அளித்தப்படி தேர்தலை முன்னதாகவே நடத்த வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசு தன் அறிக்கையில் ஈராக் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

ஈராக்கில் தேர்தல் நடத்தும்படி அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில் பொது தேர்தல் நடத்துவதற்கு இன்று போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் நடத்துவதால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் அதே அரசியல் தலைவர்கள் தான் பதவியில் அமர்வார்கள். எனவே தேர்தல் நடத்துவதால் எங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க போவதில்லை. நாட்டில் உண்மையான, நிலையான மாற்றம் தேவை.

ஈராக்கில் அரசு அமைப்பு முழுமையாக சீர்த்திருத்தப்பட வேண்டும். நாட்டில் நடக்கும் தவறுகளுக்கும் அரசு நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகளுக்கும் பதவியில் இருப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும். முறைகேடுகளை செய்துவிட்டு எளிதாக பதவியை விட்டு சென்றுவிட முடியும் என்ற நிலை மாற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ஈராக் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்க கூடாது என்றும் போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ராணுவத்தால் சதாம் உசேன் முறியடிக்கப்பட்ட பின்பு ஈராக்கில் கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவின் உதவியுடன் புதிய அரசு நிர்வாகம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக ஈராக்கின் அரசு நிர்வாகத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.ஈராக்கில் உள்ள பிரச்சனைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அதிகார மோதலும் முக்கிய காரணம். அதனால் ஈராக்கில் உள்ள ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஈராக் மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory