» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியர்களின் ரகசிய வங்கி கணக்கு விவரங்களை வெளியிட தயார்: ஸ்விட்சர்லாந்து அரசு அறிவிப்பு

திங்கள் 9, செப்டம்பர் 2019 10:35:45 AM (IST)

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் அளிக்கவுள்ளது.

வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த சில செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாமாக முன்வந்து பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் தொகுதி விவரங்களை பகிர்வது தொடர்பாக விவாதிப்பதற்கு ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த குழு ஒன்று கடந்த மாதம் இந்தியா வந்தது. அந்தக் குழு, தில்லியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது. அப்போது, இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் விவரங்களை செப்டம்பர் முதல் பகிர்ந்து கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்திய அரசுக்கு அளிப்பதற்காக, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை ஸ்விஸ் அரசு தயாரித்துள்ளது. இதுகுறித்து ஸ்விஸ் வங்கி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஸ்விட்சர்லாந்து அரசின் உத்தரவின்பேரில், ஸ்விஸ் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களிடம் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயார் செய்துள்ளன. அதில், பெரும்பாலும் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர்களின் பெயர்களும், தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், தென்அமெரிக்க நாடுகளில் வசிக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

அவர்கள் கடந்த ஆண்டில் மேற்கொண்ட பரிவர்த்தனை தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை, வங்கியில் இருந்து எடுத்த தொகை,  பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியது, முதலீடு மற்றும் காப்பீடு ஆகியவற்றின் மூலம் கிடைத்த தொகை உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இந்த விவரங்கள் இந்திய நேரடி வரிகள் வாரியத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவை, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

ஸ்விஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்கான முயற்சியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு தொடங்கியது. அதன் பிறகு, இந்தியர்களின் கணக்குகளில் இருந்து அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. சில கணக்குகள் கடந்த ஆண்டு முடித்துக்கொள்ளப்பட்டன. இருப்பினும், அந்தக் கணக்குகளின் விவரங்களும் இந்தியாவிடம் அளிக்கப்படும்.

இந்தியாவில் ஆட்டோமொபைல், ரசாயனம், ஜவுளி, மனை வணிகம், வைரம் மற்றும் தங்க நகை விற்பனை, உருக்கு விற்பனை ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள், வரி ஏய்ப்புக்காக, ஸ்விஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்க வாய்ப்புள்ளது என்று ஸ்விஸ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்விஸ் வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் இந்திய நேரடி வரிகள் வாரியத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவை, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory