» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழகத்தில் டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலை தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு

வெள்ளி 6, செப்டம்பர் 2019 12:28:20 PM (IST)

அமெரிக்காவில் டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அந்நிறுவனம் தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக கடந்த 28-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகரத்துக்கு சென்றார். அங்கு, தொழில் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, 1-ந் தேதி அமெரிக்கா சென்றார். 3-ந் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அங்கு 16 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், தமிழ்நாட்டில் 2,780 கோடி ரூபாய் முதலீடும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் அமெரிக்க நாட்டின் சான் யூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து, வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள வசதிகள் பற்றியும், தங்களின் சிறப்பான அனுபவங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.தமிழ்நாட்டில் உள்ள சிறந்த உட்கட்டமைப்பு, திறன் மிக்க மனிதவளம், தடையில்லா மின்சாரம், தொழில் நடத்த உகந்த அமைதியான சூழல், விரைவான அரசு அனுமதிகள் ஆகியவற்றை விளக்கும் காட்சி தொகுப்பும் திரையிடப்பட்டது.

முதல்-அமைச்சர் தனது உரையில், முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் விதமாக, அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், முதலீட்டிற்கு அளித்து வரும் ஊக்க உதவிகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், நிதி சார்ந்த தொழில்நுட்ப முதலீடுகளுக்கும், வானூர்தி, விண்வெளி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, லிங்கான் எலக்ட்ரிக், வியரபுள் மெம்ஸ், கால்டன் பயோடெக், இசட்எல் டெக்னாலஜிஸ் உள்பட 15 தொழில் நிறுவனங்களும், 4  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கனவே ரூ.2,780 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ள நிலையில் மேலும் ரூ.2,300 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளதால் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு ரூ.5,080 கோடி ஆனது.

இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்டார். அவருக்கு மின்சாரக் கார் தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதனைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்க அவர் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மக்களின் போக்குவரத்து சேவையை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அந்த வகையில் டெஸ்லா கார் நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால் தமிழக அரசு சார்பாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார். டெஸ்லா நிறுவன அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதலமைச்சரும், முதலமைச்சருக்கு டெஸ்லா நிறுவனத்தினரும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகள் அளித்திட டிஜிட்டல் அக்சலரேட்டர் (Digital Accelerator)  என்ற திட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அமெரிக்க தொழில் முனைவோர் ஏடிஇஏ (ATEA) என்ற அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அக்சலரேட்டர்  திட்டத்தின் கீழ் தமிழக தொழில் முனைவோர்கள் தொடங்கும் புதுத்தொழில்களுக்கு தேவையான நிதியில் 10% நிதியை தமிழக அரசு வழங்கும்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 6, 2019 - 07:13:28 PM | Posted IP 108.1*****

அட முதல்வரே முதல்ல எல்லா ஓட்டை பஸ் மாற்ற புதிய மின் பஸ் ..வெளிநாட்டு தொழிற்சாலைகளை தொடங்க விடுங்க அப்புறம் பாக்கலாம் .. கார் தொழிற்சாலைகள் எல்லாம் மக்களுக்காக அல்ல பணக்காரர்களுக்காக , பேருந்துகள் தான் அணைத்து மக்களுடையது ...

சாமிSep 6, 2019 - 01:58:57 PM | Posted IP 173.2*****

தலைவரே கமிஷன் லாம் எவ்வளவுன்னு முதல்லே பேசிருங்க , ஏன்னா நாளைக்கு ஏதும் பிரச்சினை வரக்கூடாதுல்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory