» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி

சனி 17, ஆகஸ்ட் 2019 10:31:23 AM (IST)

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடக் கூடாது என்று ரஷியா கூறியுள்ளது.மேலும் இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியுள்ளது. இந்த விவகாரத்தை ஐ.நா.வில் முறையிடப் போவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் சீனா கோரிக்கை விடுத்தது.

அதன்படி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும், போலந்து நாட்டின் பிரதிநிதியுமான ஜோன்னா ரோனெக்கா தலைமையில் மூடப்பட்ட அறைக்குள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.   இந்தக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடக் கூடாது என்று நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான ரஷியாவின் பிரதிநிதி டிமிட்ரி பாலியான்ஸ்கி வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமைதிப் பேச்சு: சீனா கருத்து

கூட்டத்தில் பங்கேற்ற சீனப் பிரதிநிதி ஜாங் ஜுன் பேசும்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத்தீர்வு காண வேண்டும் என்று கூறினார். ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு நிலைமையை மோசமாக்கும் வகையிலான செயல்களை இரு நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்று உறுப்பு நாடுகள் கவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இதனால், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பேச்சு

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கூட்டத்துக்குப் பிறகு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பருதீன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். 

ஆனால், ஜம்மு-காஷ்மீர் அபாயகரமான நிலையில் இருப்பதாக, சிலர் தங்கள் கருத்தை சர்வதேச நாடுகளின் கருத்தாக எதிரொலிக்கச் செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் கள நிலவரம் தெரியாமல் பேசுகிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். ஜம்மு-காஷ்மீர் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றார் சையது அக்பருதீன். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதிநிதி மலீஹா லோதி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் வலியும், வேதனையும் குரலாக எதிரொலித்தது என்று கூறினார்.


மக்கள் கருத்து

ராஜாAug 17, 2019 - 10:52:34 AM | Posted IP 108.1*****

உலக நாடுகளே இந்தியாவை ஆதரிக்கிறது. ஸ்டாலின் சீமான் போன்றவர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பதன் நோக்கம் ஓட்டுக்காகவோ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory