» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாடாளுமன்றத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.பி. வெளியேற்றம்: கென்யாவில் பரபரப்பு

வெள்ளி 9, ஆகஸ்ட் 2019 11:36:45 AM (IST)கென்யா நாடாளுமன்றத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்.பி. வெளியேற்றப்பட்டார்.

கென்யா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பவர் சுலைக்கா ஹசன். 3 குழந்தைகளுக்கு தாயான இவர் நேற்று முன்தினம் தனது 5 மாத குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார். குழந்தையை அங்கு எடுத்து செல்ல அந்நாட்டு சட்டத்தில் அனுமதி இல்லை என்பதால் சுலைக்கா ஹசனை நாடாளுமன்ற காவலர்கள் தடுத்து நிறுத்தினர். எனினும் சுலைக்கா ஹசன் காவலர்களை மீறி குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். இதை நாடாளுமன்றத்தில் இருந்த ஆண் உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்து, எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, நாடாளுமன்ற துணை சபாநாயகர் கிறிஸ்டோபர், சுலைக்கா ஹசனை வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார். வேண்டுமென்றால் குழந்தையை வெளியே யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு உள்ளே வருமாறு அவர் கூறினார். சுலைக்கா ஹசனின் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். எனினும் துணை சபாநாயகர் தனது உத்தரவை திரும்பப்பெற மறுத்ததால் சுலைக்கா ஹசன் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே சுலைக்கா ஹசன் கூறும்போது, "நான் என் குழந்தையை முடிந்த அளவு நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரக்கூடாது என்றுதான் முயற்சித்தேன். ஆனால் இன்று என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை” என்றார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒருவேளை நாடாளுமன்றத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள கூடிய காப்பகம் இருந்தால் நான் குழந்தையை அங்கு விட்டிருப்பேன். இந்த நாட்டில் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் இந்த துயரத்தை எதிர்கொள்கிறார்கள். எல்லோராலும் குழந்தையை பார்த்துக்கொள்ள பணியாட்களை வைத்துக்கொள்ள முடியாது. தனியார் நிறுவனங்களில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. நாட்டின் உயர்ந்த சட்ட அமைப்பான நாடாளுமன்றம் இதுபோன்ற விஷயங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்” என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory